வறுமையும் இலங்கை முஸ்லிம் சமூகமும்!

0
333

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று நம் முன்னோர்கள் வறுமையின் கொடுமையை நமக்கு சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.

வறுமை குப்ரை வரவழைக்கும் அளவுக்கு கொடூரமானது ஆகவே வறுமையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது ஒரு நபி மொழியாகும். மற்றுமோர் நபிமொழியில் நபியவர்கள் கூறினார்கள் ஒரு ஊரில் ஒருவர் பசியில் இருந்தால் அந்த ஊரின் பாதுகாப்பில் இருந்து அல்லாஹ் விலகிக்கொள்வான்.

நான் அல்லாஹ்விடம் குப்ரில் இருந்தும் வறுமையிலிருந்தும் கப்ரின் வேதனையிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றேன். இது நபியவர்களின் பிரார்த்தனையாகும்.

இவை அனைத்தும் வறுமை எந்தளவிற்கு கொடுமையானது என்பதனை நமக்கு உணர்த்துவதோடு, வறிய மக்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றாகவே, எல்லாம் வல்ல இறைவன் ஸகாத்தை ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

இலங்கையில் மற்றைய சமூகத்தினரைவிட முஸ்லிம் சமூகமே கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற விடயங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு எமது சமூகத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஒரு பாரிய சவாலாகவும், முட்டுக்கட்டையாகவும் காணப்படுவதும் மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம்தான் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் நிலமையாகும்.

வறிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என்று எத்தனையோ ஒன்றுகூடல்களும், மகாநாடுகளும் ஆங்காங்கே இடம்பெற்றாலும், இறுதியில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் பேச்சுப் பொருளாக மட்டுமே இருந்துவிட்டு மறைந்துவிடுகின்றன. எமது சமூகத்தில் இன்று வறுமைக் கோட்டின் கீழ் கிட்டத்தட்ட 500,000 மக்கள் வாழ்கின்றார்கள்.

நவீன யுகத்தில்கூட எமது தலைவர்களும், உலமாக்களும், அரசியல்வாதிகளும் வறிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தவறிவிட்டது மட்டுமன்றி ஒரு பொறிமுறையைக்கூட இன்னும் இவர்களால் அமைக்க முடியாமல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான பிரதான காரணங்களாக சுயநலவாதம், தகுதியற்ற தலைமத்துவம், அர்பணிப்புடன் செயற்படாமை, பொது நலமின்மை போன்றவை காணப்படுகின்றன.

கடந்த 15 நவம்பர் 2015ல் கொழும்பில் நடைபெற்ற தேசிய சூரா சபையின் நான்காவது பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி இலங்கையரில் 6.7% ஆனவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும்போது முஸ்லிம் சமூகத்தில் 22% ஆனவர்கள் வறுமையோடு வாழ்வதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2012 இறுதியில் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசமொன்றில் பெறப்பட்ட புள்ளிவிபரங்களின் படி 57.68% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக கண்டறியப்பட்டது. மிக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் 38% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக அரச திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட மூன்று (22%,57.68%,38%) புள்ளி விபரங்களிலுமிருந்து குறைந்தபட்சம் 25% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் எனக் கருதுவோமானால், எண்ணிக்கையில் இது 500,000 நபர்களாகும். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து நபர்கள் உள்ளனர் எனக்கருதி, அதில் இரண்டு வயது வந்தவர்களும், மூன்று சிறுவர்களும் உள்ளனர் எனக்கருதுவோமானால், 200,000 வயது வந்தவர்களும், 300,000 சிறுவர்களுமாகும். இந்த எண்ணிக்கையானது முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பொருளாதார நிலையையும், எமது தலைவர்களின் நிர்வாக தோல்வியையும், அரசியல்வாதிகளின் சுயநலத்தையுமே எடுத்துக்காட்டுகின்றது.

வறுமையை ஒழிக்க எமது தலைவர்களும், உலமாக்களும் மிக விரைவில் எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் இதே நிலை தொடருமாகயிருந்தால், செல்வந்தர்களுக்கும், வறியவர்களுக்குமிடையேயான இடைவெளி மேலும் அதிகரிப்பதோடு, குற்றச் செயல்களும் அதிகரிக்க இந்நிலமை வழிவகுக்கும். அத்தோடு நபியவர்கள் கூறியவாறு எங்கள் ஊர்களின் பாதுகாப்பிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் விலகிக்கொள்வதற்கு நாங்களே காரணமாக ஆகிவிடுவோம்.

கடந்த 2015 நவம்பரில், சரிடீஸ் எய்ட் பவுன்டேஷனினால் (Charities Aid Foundation) வெளியிடப்பட்ட உலக நன்கொடை குறிப்பீட்டின்படி (World Giving Index) இலங்கை 8 வது இடத்தைப் பெற்றுள்ளது. 2014ல் 9 வது இடத்திலும், 2013ல் 10 வது இடத்தையும் பெற்றிருந்தது.

உலகிலுள்ள எத்தனையோ வல்லரசு நாடுகளையும், மிகவும் பணக்கார நாடுகளான அரபு நாடுகளையும், தர்மம் செய்வதில் மிகவும் முன்னிலையிலிருக்கும் கிறிஸ்தவ நாடுகளையும் பின்தள்ளிவிட்டு, இவ்வாறானதொரு இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது மிகவும் பெருமையானதொரு விடயமுமாகும்.

பெரும்பான்மை சமூகத்தினரே இந்த இடத்தை இலங்கை பெறுவதற்கு காரணமானவர்கள் என்றால் அதில் எந்த சந்தேகமுமில்லை. முஸ்லிம் சமூகத்தினர் தர்மம் செய்வதில் முன்னிலையில் இருந்திருந்தால் மேற்குறிப்பிட்டவாறு 500,000 முஸ்லிம்கள் ஏன் வறுமைக்கோட்டின் கீழ் வாழவேண்டும்.

ஸகாத்தும் ஸதகாவுமாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் எமது சகோதரர்களால் ஒவ்வொரு வருடமும் தர்மம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் நமது சமூகத்தில் உள்ள பாரியதொரு பிரச்சனையாக இந்த வறுமை காணப் படுகிறது.

LEAVE A REPLY