பிராட்மேனை விட அதிக பேட்டிங் சராசரி: அடம் வோஜஸ் சாதனை

0
181

டொன் பிராட்மேனின் பேட்டிங் சராசரியை (99.94) எவராலும் மிஞ்ச முடியாது என்றே நம்பப்பட்டு வருகிறது. ஆனாலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் வோஜஸின் பேட்டிங் சராசரியானது அதை சாத்தியமானதாக்கும் என உணர முடிகிறது.

அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 176 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார் வோஜஸ்.

இதன்படி, தன்னுடைய 19 ஆவது டெஸ்ட் இன்னிங்ஸில் 100.33 ஓட்டங்களை பேட்டிங் சராசரியாகக் கொண்டுள்ளார் வோஜஸ்.

80 டெஸ்ட் இன்னிங்ஸில் ஆடியபிறகும் 99.94 பேட்டிங் சராசரியை வைத்திருந்தார் பிராட்மேன். என்றாலும் வோஜஸின் இந்த சாதனையையும் கிரிக்கெட் உலகம் மெச்சத்தக்கதாகவே பார்க்கிறது.

உதாரணமாக டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்சம் 1000 ஓட்டங்களை எடுத்தவர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்டவராக வோஜஸ் உள்ளார் (வோஜஸ் – 100.33, பிராட்மேன் – 99.94, சிட்னி பார்னஸ் – 63.05).

தன் வாழ்நாளில் இதுபோல 15 முறை பேட்டிங் சராசரியாக 100 ஓட்டங்களைக் கொண்டிருந்தார் பிராட்மேன். தன்னுடைய 15 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல்முதலாக அவருக்கு பேட்டிங் சராசரியாக 100 ஓட்டங்கள் கிடைத்தன. தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டிக்கு முந்தைய டெஸ்டிலும் பேட்டிங் சராசரி 100 ஐத் தாண்டியிருந்தது. அதிகபட்சமாக தன்னுடைய 18 ஆவது டெஸ்ட் போட்டியில் 299* ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, பிராட்மேனின் பேட்டிங் சராசரி – 112.29 ஆக இருந்தது.

மேலும் இது வோஜஸின் 14 ஆவது டெஸ்ட் போட்டி. தன்னுடைய முதல் 14 ஆவது டெஸ்ட் போட்டியின்போது மூன்று இரட்டைச் சதங்கள் உள்ளிட்ட 8 சதங்களை எடுத்திருந்தார் பிராட்மேன். வோஜஸ், ஒரு இரட்டைச் சதம் உள்ளிட்ட 5 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

எனவே, பிராட்மேனின் மேதமையின் முன்னால் வோஜஸ் எந்தளவுக்கு சரிசமமாக நிற்பார் என்று சொல்வதற்கு இன்னும் காலமிருக்கிறது. எனினும், இந்தக் காலத்திலும் டெஸ்ட் பேட்டிங் சராசரியாக 100 ஓட்டங்கள் இருப்பது சாத்தியமே என்று அவர் நிரூபித்துள்ளார்.

அண்மைக்காலங்களில் அதிக ஓட்டங்களை அவர் குவித்து வருவதுடன், நிறைய நாட் அவுட் வேறு.
டெஸ்ட் போட்டியில் 551 ஓட்டங்கள் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமலேயே உள்ளார். இது ஓர் உலக சாதனை. இதனாலேயே அவருடைய பேட்டிங் சராசரி நூறைத் தாண்டியுள்ளது. (இதற்கு முன்னால் ஆட்டமிழக்காமல் அதிக ஓட்டங்களை எடுத்தவர், சச்சின். 497 ஓட்டங்கள்.)

இந்தச் சாதனையை அடுத்து புதிய பிராட்மேன் என்று வோஜஸைப் பலரும் அழைக்கத் தொடங்கியுள்ளார்கள்.

LEAVE A REPLY