ஓய்வு அறிவித்தார் ஷிகர் தவான்

0
371

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் ஓய்வு அறிவித்தார் என்றவுடன் ஷாக் ஆக வேண்டாம். அவர் இனி பந்துவீச மாட்டேன் என்றும், பந்துவீச்சில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கூறியுள்ளார்.

ராஞ்சியில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ஷிகர் தவான் 25 பந்தில் 51 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் அணியின் ஓட்டங்கள் ஆரம்பத்திலே மளமளவென்று உயர்ந்தது.

இதனால் இந்திய அணி இமாலய ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்தப் போட்டியில் 69 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற, ஆட்டநாயகன் விருதை தவான் தட்டிச் சென்றார்.

இது பிறகு பேசிய தவான், நான் பந்தை நன்றாக வெளுத்து வாங்கினேன். எனது பாணியிலே விளையாட எனக்கு பிடித்துள்ளது. டோனியிடம் இருந்தும், எனது பயிற்சியாளரிடம் இருந்தும் எனக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது.

வேகமாக ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்று நாங்கள் எந்த திட்டமும் வைக்கவில்லை. நான் சிறப்பாக தொடங்கும் போது அப்படியே அனைத்தும் சிறப்பாக அமைந்து விடும் என்று கூறியுள்ளார்.

பந்துவீசுவது தொடர்பாக ஜாலியாக கவாஸ்கர் கேட்ட போது, நான் எனது ரசிகர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அதாவது நான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் பந்துவீச்சில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தவான் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் ஷிகர் தவான் பந்து வீச அவரது பந்துவீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக கூறி ஐசிசி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.

LEAVE A REPLY