ஜிகா வைரஸ் தொற்று: வெனிசுலாவில் 3 பேர் பலி

0
136

தென் அமெரிக்க நாடான வெனிசு லாவில் ஜிகா வைரஸ் தொற்று காரணமாக 3 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிபர் கூறினார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில், “வெனிசுலா முழுவதும் 319 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துரதிருஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்தனர்” என்றார்.

மதுரோ மேலும் கூறும்போது, “ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். அவர்களை குணப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள் நம்மிடம் உள்ளன. நவம்பர் 5 முதல் பிப்ரவரி 8 வரை 5,221 பேரிடம் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. இந்தியா, கியூபா, சீனா, ஈரான், பிரேசில் ஆகிய நாடுகள் தேவையான மருந்துகள் மற்றும் பிற உதவிகள் அளித்து வருகின்றன. இந்நாடுகளின் ஆதரவுக்கு நன்றி” என்றார்.

தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் வகை கொசுக்கள் ஜிகா வைரஸையும் பரப்பி வருகின்றன.

பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் 15 லட்சம் பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. குறிப்பாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, பார்வை குறைபாடு, மூளை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன. எனவே கருத்தரிப்பை தள்ளிப் போடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு, சிக்குன்குனியாவை ஒப்பிடும்போது ஜிகா வைரஸால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு மிகவும் குறைவு. எனினும் சில நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஜிகா வைரஸ் பரவி வருவதால் சர்வதேச அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய் துள்ளது.

இந்தியா, கியூபா, சீனா, ஈரான், பிரேசில் ஆகிய நாடுகள் வெனிசுலாவுக்கு தேவையான மருந்துகள் மற்றும் பிற உதவிகளை அளித்து வருகின்றன.

LEAVE A REPLY