திசர பெரேரா ஹாட்ரிக் சாதனை: இந்தியா 196 ரன்கள் குவிப்பு

0
211

ராஞ்சியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் இலங்கை பவுலர் திசர பெரேரா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.

எளிதில் 200 ரன்கள் எடுத்திருக்க வேண்டும், ஆனால் ஆட்டத்தின் 19-வது ஓவரில் திசரா பெரேரா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார், இவர் அடுத்தடுத்த பந்துகளில் ஹர்திக் பாண்டியா (27), சுரேஷ் ரெய்னா (30), யுவராஜ் சிங் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் இது 4-வது ஹாட்ரிக் சாதனையாகும்.

ஹர்திக் பாண்டியா முதலில் பெரேராவின் தாழ்வான புல்டாஸை அடிக்க முயன்று குணதிலகவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தில் பேட்டிங் முனைக்கு மாறிய ரெய்னா, ஒதுங்கிக் கொண்டு பெடல் ஷாட் ஆட முயன்றார், ஆனால் ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனது, ரெய்னா 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். ஹாட்ரிக் பந்தை சந்திக்க இறங்கிய யுவராஜ் தாழ்வான புல்டாஸை சிக்ஸ் அடிக்க முயன்றார் ஆனால் ஷாட்டில் வலுவில்லை இதனால் லாங் ஆனில் பவுண்டரி அருகே கேட்ச் ஆனது. பெரேரா ஹாட்ரிக் எடுத்தார்.

டாஸ் வென்ற இலங்கை கடந்த போட்டியை மனதில் கொண்டு முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. ஆனால் இலங்கை எதிர்பார்த்தது போல் பிட்ச் அமையவில்லை, ஷிகர் தவணும் வேறொரு மூடில் இறங்கியிருந்தார். அவர் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 22 பந்துகளில் அரைசதம் கண்டார், டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவண் எடுக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிக்ஸ் குறிப்பாக ஸ்கொயர் லெக்கில் அடித்தது, இலங்கை வீரர்களுக்கே ஜெயசூரியாவை நினைவூட்டிய ஷாட் ஆகும்.

தவண் 25 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 51 எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இந்திய அணியின் ஸ்கோர் 7-வது ஓவரில் 75 என்று எழுச்சித் தொடக்கம் கண்டிருந்தது. யுவராஜ் சிங்கின் 12 பந்துகள் அரைசத உலகசாதனை, பிறகு அவரே இருமுறை 20 பந்துகளில் அரைசதம் எடுத்தது, கம்பீர் 19 பந்துகளில் அரைசதம் கண்டது, அதன் பிறகு தற்போது ஷிகர் தவண் 22 பந்துகளில் டி20-யில் அரைசதம் கண்டுள்ளார்.

ரோஹித் சர்மா தொடக்கத்தில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசியவர், பிற்பாடு சற்றே நிதானித்தார், இடையில் சமீரா, பிரசன்னா, சிறிவதனா சில பவுண்டரி இல்லாத பந்துகளை வீசினர்.

ஆனாலும் ரஹானே 21 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, அவரும் ரோஹித்தும் 6.1 ஓவர்களில் 47 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ரோஹித் சர்மா 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் ஆட்டமிழந்ததற்கு சிறிது நேரத்திற்கெல்லாம் ரஹானே, சேன நாயகே பந்தில் வெளியேறினார். ரஹானே அவுட் ஆகும் போது 14.2 ஓவர்களில் ஸ்கோர் 127/3 என்று இருந்தது.

அப்போதுதான் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் சேனநாயகவை டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸும், லாங் ஆனில் ஒரு சிக்ஸும் அடித்தார். அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது. அதன் பிறகு 2 ஓவர்களில் 10 ரன்களையே கொடுத்திருந்த சமீராவை ரெய்னா 4 அருமையான பவுண்டரிகளை அடித்தார். ரெய்னா, பாண்டியா இணைந்து 26 பந்துகளில் 59 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அதன் பிறகுதான் பெரேரா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

தோனிக்கு 5 பந்துகள்தான் கிடைத்தது இதில் கடைசி பந்தில் சைனீஸ் கட் பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இந்தியா 196/6 என்று நல்ல ஸ்கோரை எட்டியது.

LEAVE A REPLY