பாடசாலைக்கு பாடசாலை, பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாண கல்விப் பகுதியினர் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

0
60

ஒரு பாடசாலைக்கு ஒரு வகையாகவும் இன்னொரு பாடசாலைக்கு இன்னொரு வகையாகவும் தீர்மானமெடுக்கும் பாகுபாட்டை கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியினர் கைவிட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டம் ஒன்று தான் அது பொதுவானதாகத் தான் அமுல் படுத்தப்பட வேண்டும். சட்டத்தில் ஆளுக்காள் வேறுபாடுகாட்ட முடியாது. அதே போல இனத்துக்கு இனம் வேறுபாடும் காட்ட முடியாது.

ஆனால் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தான் விரும்பியபடி பாடசாலைகளில் பாகுபாடு காட்டி வருகின்றது. சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடமொன்று ஏற்படுகின்ற போது தமக்கு விருப்பமான ஒருவரை அவரது தகைமையைப் பற்றி பார்க்காது பதில் அதிபராக நியமிக்கும் செயற்பாட்டை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ளது.

இன்னும் சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் போது முறைப்படி விண்ணப்பம் கோரி அதன் மூலம் நியமனம் வழங்கப்படுகின்றது. ஏன் இந்தப் பாகுபாடு? இப்படி பாகுபாடு காட்டும் சட்டம் நாட்டில் உள்ளதா? நல்லாட்சி என்றால் நேர்மை இருக்க வேண்டுமே?

திருகோணமலை கல்வி வலயத்தில் அண்மையில் சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது விண்ணப்பம் கோராமலே பதில் அதிபர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்டுள்ள போது அதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கல்வி என்பது புனிதமானது. அது எல்லோருக்கும் அறிவு ஒளியைத் தருவது. எனவே பாடசாலை நிர்வாகத்தில் இனரீதியான பாகுபாடு காட்டப்படக்கூடாது. விண்ணப்பம் கோருவதென்றால் எல்லாப்பாடசாலைகளுக்கும் விண்ணப்பம் கோர வேண்டும். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் இந்த விடயங்களில் நேரடியாகத் தலையிட்டு இப்படியான பாகுபாடுகள் இடம்பெறாமல் பார்க்க வேண்டியது மிக அவசியமாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 –சப்ரி

LEAVE A REPLY