தெற்கு சூடான் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி: துணை அதிபராக ரைக் மச்சா மீண்டும் நியமனம்

0
162

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு கடந்த 2011–ம் ஆண்டு உருவானது. அன்றிலிருந்தே அங்கு உள்நாட்டு போர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தெற்கு சூடானின் முதல் துணை அதிபராக பதவியேற்ற ரைக் மச்சார் பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்களும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும், அங்கு உற்பத்தி குறைந்து வேலையின்மையும், உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதியில் உள்ள பார்எல்கஷல், வார்ப்ப ஆகிய மாகாணங்களில் கடும் உணவு பற்றாக்குறை உருவாகியுள்ளது.

இதேபோல், பல மாகாணங்களிலும் பரவலாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சூடான் முழுவதும் 20 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 40 ஆயிரம் பேர் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு நடந்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், மக்களின் வறுமை நிலையைப் போக்கி பசி, பஞ்சம், பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்தது.

தற்போதைய அதிபர் சால்வா கிர் மற்றும் பதவிநீக்கம் செய்யப்பட்ட ரைக் மச்சார் இடையில் அதிகார பரவல் ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டது.

நாட்டு ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கடும் பின்னடைவை சந்தித்துவந்த நிலையில் தனது மந்திரிசபையில் முன்னாள் துணை அதிபர் ரைக் மச்சாரின் ஆதரவாளர்களையும் சேர்த்துக் கொள்ளப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அதிபர் அறிவித்தார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் முதல்கட்ட நடவடிக்கையாக ரைக் மச்சார்-ஐ மீண்டும் துணை அதிபராக நியமித்து அதிபர் சால்வா கிர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY