ஏமனில் உச்சகட்ட தாக்குதல் நடத்த சவுதி முடிவு: ஐ.நா. குழுவினரை வெளியேறுமாறு எச்சரிக்கை

0
376

ஏமன் நாட்டில் அதிபரின் அரசுப் படைகளை எதிர்த்து ஹவுத்தி கிளர்ச்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். ஈரானின் ஆதரவுடன் ஏமனில் போராடிவரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஒன்பது அரபு நாடுகளின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக சவுதி அரேபியா கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தப் போரில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர். உள்நாட்டு முகாமிலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட மனிதநேய உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு முகமை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி போராளிகள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உச்சகட்ட தாக்குதலை நடத்த சவுதி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே, போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் அகதிகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு முகமை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தொண்டூழியர்களை பாதுகாப்பு கருதி அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசு கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை கடிதம் ஐ.நா. அகதிகள் மறுவாழ்வு முகமை மற்றும் சில தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபியா அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதியின் இந்த கடிதம் கிடைக்கப் பெற்றதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா. நிவாரணக்குழு செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் ஓ’பிரியன், எனினும், ஏமனில் அவதிப்படும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கு கட்டுப்பட்டு இவ்வகையிலான மனிதநேய உதவிகள் பாதிக்கப்படும் மக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு தேவையான உதவிகளை செய்துதர சவுதி அரேபியா முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY