சிரியாவில் மோதல் நிறுத்தம் கோர உலக வல்லரசுகள் உடன்பாடு

0
184

சிரியாவில் நாடு முழுவதும் மோதல்களை நிறுத்தக் கோருவதற்கான ஒரு உடன்பாட்டுக்கு உலக வல்லரசு நாடுகள் வந்துள்ளன.

மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள்
மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள்

ஒரு வாரத்தில் இந்த மோதல் நிறுத்தம் ஆரம்பிக்க வேண்டும் என்று ஜேர்மனியின் முனிக்கில் நடந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜிகாதி குழுக்களான இஸ்லாமிய அரசு மற்றும் அல் நுஸ்ரா முன்னணி ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்த மோதல் நிறுத்தம் பொருந்தாது.

17 நாடுகள் அடங்கிய சிரியாவுக்கான சர்வதேச ஆதரவுக்குழு, சிரியாவுக்கான உதவி விநியோகத்தை வேகப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்ய வான் படை ஆதரவுடனான சிரியாவின் அரசாங்க படைகள் அலெப்போ நகருக்குள் முன்னேறியுள்ள நிலையில் இந்த உடன்பாடு வந்துள்ளது. இந்த முன்னேற்றத்தால் அலெப்போவில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

கிளர்ச்சிக்காரர்களின் கூட்டமைப்பு இந்த உடன்படிக்கையை வரவேற்றிருந்தாலும், சிரியாவின் அரசாங்கம் இது குறித்து இன்னமும் கருத்து எதுவும் கூறவில்லை.

இந்த மோதல் நிறுத்தத்தை அமல்படுத்துவது குறித்து இன்னமும் கவலைகள் இருக்கவே செய்கின்றன.

சிரியாவில் 5 வருடமாக நடக்கும் மோதல்களால் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

(BBC)

LEAVE A REPLY