மனித வெடிகுண்டு தாக்குதல்: நைஜீரியாவில் 70 பேர் பலி

0
116

நைஜீரியாவில் வீடு இழந்தவர்கள் தங்கியிருந்த முகாம் மீது, போகோ ஹாரம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பெண் மனித வெடிகுண்டுகள் நேற்று முன்தினம் நிகழ்த்திய தாக்குதலில் 70 பேர் பலியாயினர். 78 பேர் காயமடைந்தனர்.

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாண தலை நகர் மைடுகுரியிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள திக்வா என்ற இடத்தில்தான் இந்தத் தாக்குதல் நடந்தது. போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் மீது கடந்த வாரம் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் மூலம் உள் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போர்னோ மாகாண நெருக்கடிகால நிர்வாக முகமையின் தலைவர் சதோமி அகமது கூறும்போது, “தங்களது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய 3 பெண்கள் காலை 6.30 மணிக்கு முகாமுக்கு வந்துள்ளனர். இதில் 2 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். மற்றொரு பெண், தன்னுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் முகாமில் இருந்ததை உணர்ந்ததால் வெடி குண்டை வெடிக்கச் செய்ய வில்லை. பின்னர் அதிகாரிகளிடம் சரணடைந்த அந்தப் பெண் இந்தத் தகவலை கூறினார்” என்றார்.

நைஜீரியா அதிபர் முகமது புஹாரி விடுமுறையில் உள்ளார். இதனால் அவருடைய பொறுப்பை கவனித்து வரும் துணை அதிபர் யெமி ஓஸின்பஜோ கூறும் போது, “ஏற்கெனவே தீவிரவாத தாக்குதலால் வீடுகளை இழந்த வர்களை தங்க வைத்துள்ள முகாம் மீது தீவிரவாதிகள் மனிதாபி மானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

தாக்குதலுக்குக் காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற முகாம்களுக்கு கூடுதல் பாது காப்பு தர உத்தரவிட்டுள் ளேன்” என்றார்.

LEAVE A REPLY