வெனிசுலாவில் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு 3 பேர் பலி

0
136

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட சுமார் 30 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது.

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் ஸிகா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஸிகா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் ஸிகா பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிகா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது. ஸிகா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 லட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், கொசுக்கள் எங்கெல்லாம் உள்ளனவோ.., அங்கெல்லாம் ஸிகா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலும் ஸிகா நோய் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில், தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஸிகா வைரஸ் தொற்றுக்கு மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, நாட்டும் மக்களிடையே தொலைக்காட்சி மூலம் பேசிய வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ கடந்த நவம்பர் மாததில் இருந்து பிப்ரவரி ஐந்தாம் தேதிவரை 5,221 பேர் ஸிகா தொற்றுக்கு உள்ளானதாகவும், 319 பேரை ஸிகா நோய் தாக்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இவர்களில் 68 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸிகா நோய் பாதிப்புக்குள்ளான மூன்று நோயாளிகள் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY