பாடசாலை அபிவிருத்திக் குழு பாடசாலையின் நிருவாகத்தை நேரடியாக கையாழுகின்ற சபையாக மாறக்கூடாது: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

0
417

ஒரு பாடசாலை அபிவிருத்திக் குழுவானது அந்தப் பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு உதவியாக செயற்பட வேண்டுமே தவிர மாறாக பாடசாலை நிருவாகத்திற்கு கட்டளையிடுகின்ற சபையாக மாறமுடியாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்; தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அக்ஃஅந்-நூர் மகா வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (2016.02.09) செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் ஏ.எல். கிதுறு முஹம்மட்  தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்தப் பாடசாலையானது பல வருடகாலமாக புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடுதலான மாணவர்களை சித்தியடையச்செய்து வரலாற்றுச் சாதனையினை நிலைநாட்டிவருகின்றது. அதனாலே இப்பாடசாலையானது தேசிய ரீதியாக பேசப்படுமளவிற்கு இன்று நிலமை மாறியிருக்கின்றது.

இதற்கு காரணம் இப்பாடசாலையிலுள்ள அதிபர், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களுமே இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தனது பிள்ளையின் கல்வி விடயத்தில் அதீத அக்கரையுடன் செயற்படுவதனை காணமுடிகின்றது. நாம் எல்லோரும் மேற்கொண்ட முயற்சியினுடைய அறுவடைகளைத்தான் நாம் இன்று மகுடம் சூடிக்கொண்டிருக்கின்றோம்.

இங்கு அதிபராக ஒருவர் இருக்கலாம், நாளை வேறு யாராவது வரலாம் ஆனால் இங்குள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிபருடன் பாடசாலை அபிவிருத்தியில் ஒன்றித்து பயணிக்க வேண்டும். ஒரு பாடசாலையில் அதிபரை கொண்டுவருவதற்கும் பாடசாலையில் நல்ல பல விடயங்களைச் செய்வதற்கும்; முதலில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினரிடையே ஒத்த கருத்து ஏற்பட வேண்டும். இல்லை எனில் அக்குழுவானது தேவையற்ற குழுவாகவும், பிரச்சினைகளை வளர்க்கக் கூடிய ஒரு குழுவாகவுமே காணப்படும். இன்று பாடசாலைகளில் இவ்வாறான அபிவிருத்திக் குழுக்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட்டு கல்வி அபிவிருத்திக்கு உதவுகின்ற சபையாகவே மாத்திரம் இருக்கவேண்டும்.

இப்பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களிடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் இப்பாடசாலையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது சிலர் கல்வி அபிவிருத்தி என்பதனை விடவும் தங்களுடைய கருத்துக்கள் பாடசாலைக்குள் பிரதிபலிக்க வேண்டும் என எண்ணியிருந்த போது பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் குழுவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்து இறுதியில் பாடசாலை அபிவிருத்திக் குழுவை கலைக்கவேண்டியேற்பட்டது

பாடசாலை அபிவிருத்திக் குழு என்பது அதிபர் ஆசிரியர்களுக்கு ஒத்தாசையாக நின்று பாடசாலை அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கக்கூடியவர்களாக காணப்படவேண்டும். அது யாராக இருப்பினும் சரியே எங்களுக்கு அவைகள் முக்கியமல்ல கல்விச் செயற்பாடுகள் சிறப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும்.

ஆள் பேருக்காக யாரையும் நியமித்துவிட்டு நமது பணி முடிந்து விட்டது என யாரும் கருதிவிடாதீர்கள். பாடசாலைக்கு வளங்கள் சரியாக கிடைக்கப்பெறுகின்றதா, கற்றல் கற்பித்தல் செயற்பாடு திறன்பட நடைபெறுகின்றதா என்பதனை பெற்றோர்களாகிய நீங்களும் கவனம் செலுத்துவது முக்கியமாகும். அப்போதுதான் பாடசாலைக்கும் பெற்றோருக்குமிடையில் நல்லதொரு உறவு ஏற்படும். மனிதன் என்ற வகையில் தவறுகள் நடப்பதுண்டு இல்லை என்று சொல்வதற்கில்லை அதற்காக எல்லோரையும் ஆளுமையற்றவர்கள் என நாம் புறந்தள்ளிவிடக் கூடாது.

முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையும் நானும் அரசியலுக்கு அப்பால் இப்பிரதேசத்தின் கல்வி விடயத்தில் நாங்கள் இருவரும் ஒன்றினைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம். அரசியல் காலங்கள் வேறு அதற்காகவே வேறு மேடைகளும் திட்டங்களும் உள்ளது மாகாண சபையில் உறுப்பினராக இருக்கின்ற எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களும் அமைச்சராக இருக்கின்ற நானும் எமது பிரதேச கல்வி நிலை தொடர்பாக இரு வேறு கருத்துக்களுடன் சபையில் உரையாற்ற முடியாது அது நமது மண்ணுக்கு மகிமையல்ல பல கல்வியளாலர்களை பிரசவித்த ஊர் இது அதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.

ஏதிர்வரும் காலங்களில் இங்கு இருக்கின்ற பெற்றோர்கள் அதிபர் அசிரியர்களுடன் இணைந்து பாசாலை கல்வி அபிவிருத்திக்கு உழைக்கின்ற நல்லதொரு சபையை உடனடியாக தெரிவு செய்ய வேண்டும் என அதிபரை கேட்டுக்கொள்கின்றேன். அதனூடாக இப்பாடசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் நாங்களும் எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினூடாக இப்பாடசாலைக்கும் நல்லபல பணிகளை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னால்; கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை, அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஹாசீம், உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.நியாஸ் மௌலவி, ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் மற்றும் கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

றிசாத் ஏ காதர்

LEAVE A REPLY