பண மோசடி செய்தோருக்கு நல்லாட்சியில் மீட்சி இல்லை

0
236

விசாரணைகளில் அரசு தலையீடு செய்யாததாலேயே தாமதம்

பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவர்களுக்கு நல்லாட்சியில் எவ்வித மீட்சியும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சி பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க கடந்த சில வாரத்துக்கு முன்னர் எழுப்பியிருந்த கேள்விக்கு நேற்று பதில் வழங்கியபோதே பிரதமர் இதனைக் கூறினார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் திருட்டுக்கள் தொடர்பான விசாரணைகளில் நாம் தலையீடு செய்யாததால் விசாரணைகளில் தாமதம் நிலவுகிறது.

இதனால் நாம் டீல்களின் மூலம் தவறிழைப்பவர்களை பாதுகாத்து வருவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர் என்று தெரிவித்த பிரதமர், தவறு செய்தவர்களை தாம் ஒருபோதும் காப்பாற்ற மாட்டோம் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மோசடி மற்றும் திருட்டுக்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜனவரி எட்டாம் திகதி மாற்றத்துடன் ஒரு பக்கமாக சென்றுகொண்டிருந்த பயணம் திடீரென வேறு பக்கம் திரும்பியது. இந்த நிலையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு 216 முறைப்பாடுகளும், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 34 முறைப்பாடுகளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 63 முறைப்பாடுகளும், பொலிஸ் நிதிப்பிரிவுக்கு ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளன.

இவற்றில் 35 விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எமது எதிர்த்தரப்பினர் தொடர்பிலே இது குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் தங்களை வேட்டையாடவும், பழிவாங்கவும் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நாம் ஒருபோதும் விசாரணைகளில் தலையீடு செய்யவில்லை. எந்த அழுத்தமும் வழங்கவில்லை. விசாரணைகள் தாமதம் அடைவதால் நாம் ‘டீல்கள்’ மூலம் தவறு செய்தவர்களைப் பாதுப்பதற்கு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சகல பிரஜைகளுக்கும் சட்டத்தின் பாதுகாப்பைப்பெற உரிமை இருக்கிறது. யாராவது தவறு செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். நாம் ஒருபோதும் தவறு செய்தவர்களை பாதுகாக்க மாட்டோம். அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தோருக்கு ஒருபோதும் மீட்சியில்லை. நல்லாட்சியில் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, டுபாய் வங்கிகளில் மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கருத்து வெ ளியிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணை குறித்தே தான் கேள்வி எழுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பிலும் நாம் விசாரணை முன்னெடுத்தால் எதிர்த்தரப்பினரை வேட்டையாடுவதாகக் குற்றஞ்சாட்டுவார்கள்.

இதனால் இது தொடர்பில் முறையிடத் தேவையில்லை எனக் கூறியிருந்தேன்.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் மூலம் டுபாய் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டது குறித்தும் தகவல்கள் வெளியாகும் என்றார்.
-Tinakaran-

LEAVE A REPLY