இலங்கையில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் தரப்படுத்தலின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும்

0
66

இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான சுமார் 250 ற்கும் மேற்பட்ட அறபு மதரசாக்கள் இருக்கின்றன, பெரும்பாலும் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உள் வாங்கப் படுகின்றார்கள்.

அதற்கும் மேலாக நூற்றுக் கணக்கில் ஹிப்லு மதரஸாக்கள் இருக்கின்றன அவற்றிற்கு இளம் சிறார்கள் உள்வாங்கப் படுகின்றார்கள். வருடாந்தம் சுமார் 2500 ஆலிம் ஹாபிஸுகள் பட்டம் பெற்று வெளியேறுவதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லறமெனும் நல்லறம் போற்றும் இஸ்லாமிய வாழ்வு நெறியில் மதகுரு பீடங்களோ, துறவறமோ, சந்நியாசமோ இல்லை என்பதனால் ஆலிம் ஹாபிஸுகளும் தமக்குரிய வாழ்வாதாரங்களை தேடிக்கொள்ள கடமைப் பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஆசாபாசங்களும் தேவைகளும், கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன.

அரசோ சமூகமோ அல்லது வக்ஃபு நிதியங்களோ அவர்களுக்கான தொழில் ரீதியான உத்தரவாதங்களை வழங்குவதில்லை, எல்லோருக்கும் மஸ்ஜிதுகளிலும் மதரசாக்களிலும் தொழில்கள் கிடைப்பதுமில்லை, அவ்வாறு கிடைத்தாலும் உத்தரவாதங்களும், உரிமைகளும் சலுகைகளும் ஓய்வூதியங்களும் அவர்களுக்கு இல்லை. எமது சமூகத்தையும் தேசத்தையும் பொறுத்தவரையில் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட சகலதரப்புக்களினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான விவகாரமாகும்.

பருவ வயதை எய்தாத பாலகர்கள் சிறார்களின் எதிர்கால வாழ்வை பெற்றார்கள் அல்லது நிறுவனங்கள் தீர்மானிக்கின்ற பொழுது அவர்களது அடிப்படைஉரிமைகள் மீறப்படாமல் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதே போன்றே தேசத்தினது அளப்பரிய செல்வங்களான சிறார்களின் கல்வி வாழ்வை தீர்மானிக்கின்ற அறபு ஹிப்லு மத்ரசாக்களின் பாடவிதானங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு தரப்படுத்தலின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

அவர்களுக்கான வாழ்வாதாரக் கற்கைகள் தொழில் தொழில் நுட்பக் கற்கைகள் பெற்றுக் கொடுக்கப்பபடுதல் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் இலவசமாக வழங்கும் சாதாரண தர மற்றும் உயர்தரக் கற்கைகள் அவர்களுக்கு வழங்கப்படுவது கண்டிப்பாக உறுதி செய்யப்படுதல் வேண்டும், அவர்கள் பருவமடைந்த பின்னர் அல்லது பதினேழு பதினெட்டு வயதை அடைந்த பின்னர் உயர்கல்வி குறித்த தீர்மானத்தை இன்ஷாஅல்லாஹ் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

உயரிய இஸ்லாமிய பணியிற்காக தமது வாழ்நாளை அர்பணிக்கும் கண்ணியமிக்க உலமாக்கள் ஹாபிஸுகள் விடயத்தில் சமூகத்தின் சிவில், சன்மார்க்க, அரசியல் தலைமைகள் கூட்டுப்பொறுப்புணர்வுடன் கூடிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.

மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

LEAVE A REPLY