முஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸே: வை.எல்.எஸ்.ஹமீட்

0
242

அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -01 பாகம் ஒன்றில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்கள் தரப்பட்டிருந்தன. இத்தலைப்புக்களை முஸ்லிம்களின் கோணத்தில் இருந்து ஆராய்கின்ற பொழுது மூன்று பிரதான அம்சங்களை அடையாளம் காணலாம்.

01.ஜனாதிபதி ஆட்சி முறைமையினை ஒழித்துபாராளுமன்ற அட்சி முறையினை கொண்டுவருதல்.
02.தேர்தல் சீர்திருத்தம்
03.அதிகார பரவலாக்கள்.

இம் மூன்று தலைப்புக்களும் விரிவாக ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இம்மூன்று தலைப்புக்களும் முஸ்லிம்களின் எதிர்காலத்தினை பதம்பார்க்க கூடியதாக இருகின்றது. இம் மூன்று தலைப்புக்களையும் விரிவாக ஆராயும் முன் அவை முஸ்லிம் சமூகத்தின் மீது செலுத்தக் கூடிய தாக்கத்தின் வீச்சை சுருக்கமாக பார்த்த பின் மீண்டும் விரிவாக ஆராயலாம்.

அந்தவகையிலே ஜனாதிபதி ஆட்சி முறை பற்றி பார்ப்போமானால்,
இந்த நாட்டில் ஜனாதிபதியினை தீர்மானிப்பதிலும் அவரை மாற்றுவதிலும் சிறுபான்மை சமூகங்களின், குறிப்பாக முஸ்லிம்களின் பங்கினை கடந்த தேர்தலில் நடைமுறையில் கண்டோம். ஜனாதிபதி ஆட்சி முறைமை நீக்கப்படுமாயின் இந்தநாட்டின் ஆட்சியாளரை தெரிவு செய்வதில் நமக்கு இருக்கின்ற பங்கு இல்லாமல் போகின்றது.

இரண்டாவதாக தேர்தல் சீர்திருத்தத்தினை பார்க்கின்றபொழுது, புதிய தேர்தல் முறையில் ஒருதனிக்கட்சி சுயமாக 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை பெற்று தனியாக ஆட்சி அமைக்கின்ற விதத்தில் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. அதில் அவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சியை தீர்மானிப்பதில் அல்லது ஆட்சியில் பங்காளர்களாக இருக்கின்ற நிலைமையில் இருந்து சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகமானது தனது நிலையினை இழக்கப்போகின்றது. சுருக்கமாக கூறுவதாயின் மத்திய ஆட்சியில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதுவித பங்கும் இருக்கப் போவதில்லை.

மூன்றாவதாக அதிகாரப்பகிர்வினை பார்க்குமிடத்து, இன்று மத்தியில் இருக்கின்ற அதிகாரத்தின் கணிசமான பகுதியினை எடுத்து மாகாணங்களுக்கு வழங்கப்போகின்றார்கள். இதனை மறு வார்த்தையில் கூறுவதாயின் இன்று மத்தியில் இருக்கின்ற அதிகாரமையத்தின் வீரியம் குறைக்கப்பட்டு மேலும் பலமான ஒன்பது அதிகார மையங்கள் உருவாக்கப்பட போகின்றன. (இன்று இருக்கின்ற மாகாண சபைகள் வெறும் பெயரளவிலேயே இயங்குகின்றன என்பது கவணத்தில் கொள்க.) அவ்வாறு உருவாக்கப்படுகின்ற ஒன்பது அதிகார மையங்களுள் கிழக்கினை தவிர ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்கள் அரசியல் பலமுள்ள ஒரு சமூகமாக இல்லை என்பது தெளிவான விடயமாகும். அவ்வாறான சூழ் நிலையில் அம் மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின் நிலைமை கஸ்டமானதாக மாறப்போகின்றது.

சுருக்கமாக கூறுவதாயின் மத்தியிலும், மாகாணக்களிலும் ஒரு செல்லாக்காசான சமூகமாக மாறுவதற்கான வாய்பு இருக்கின்றது. இந்நிலையில் !!.முஸ்லிம் இளைஞனே! தூங்குவதற்கு உனக்கெங்கே நேரமிருக்கின்றது? நாம் செல்ல வேண்டிய பாதை பரந்து விரிந்து கிடக்கின்றது.!! என்ற அல்லாமா இக்பாலின் கவிதையினை நினைவு கூர்ந்தவர்களாக நாம்விழித்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த ஆபத்தான நிலையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மால் முடிந்த ஜனநாயக வரம்பிற்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கின்றது. ஓவ்வொரு முஸ்லிம் சகோதரனும், சகோதரியும் இது எனது பிரச்சனை என்ற உணர்வை உள்வாங்கி செயற்பட்டாக வேண்டும்.

தவறுவோமாயின் நமது எதிர்காலம் மாதிரமல்லாமல் நமது பல தலைமுறைகளின் எதிர்காலமும் கேளிவிக்குறியாக்கப்படலாம். நாம் இரண்டாம் தர பிரஜைகளாக மாற முடியாது. இந்த நாடு நமக்கும் உரியது. இந்த நாட்டின் அரசியல் அமைப்பு மாற்றம் நம்மை பலிக்காடாவாக்க முன்னர் நாம் விழித்துக்கொள்வோம். ஆகவே இவைகளின் ஆழ, அகலங்களை தெளிவாக புரிந்து கொள்வதற்காக அவற்றை விரிவாக ஆராய்வோம்.

ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலம் சென்ற மதிப்பிற்குறிய சோபித்த தேரரின் தலைமையில் இயங்கிய அமைப்பானது பொது வேட்பாளர் தேடும் முயற்சியில் இறக்கியதன் முக்கிய நோக்கம் ஜனாதிபதி ஆட்சி முறைமையினை ஒழித்து பாராளுமன்ற ஆட்சி முறைமையினை கொண்டு வருவதாகும். இதற்கான காரணம் ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகாரமானது சர்வதிகாரத்திற்கு இட்டுச் செல்கின்றது என்பதாகும்.

ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகாரத்தினை சீர்திருத்துவதன் மூலம் நியாயமான அதிகாரத்தினை கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சி முறைமையினை கொண்டு வருவதினை மாற்றுத் தீர்வாக முன்வைத்திருக்கலாம். ஆனால் இது தொடர்பாக எவரும் பேசவில்லை. பொது வேட்பாளர் அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே இவ்விடயம் தொடர்பாக குறித்த தேரர் தலைமையிலான அமைப்புடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் முஸ்லிம் கட்சிகள் பேச வேண்டும் என்ற அடிப்படையில் நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை என்பது துரதிஸ்ட்டவசமான விடயமாகும்.

அதுதொடர்பாக நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. இந்த நிலையில் எதிரணியினர் ஜனாதிபதி ஆட்சி ஒழிப்புத் தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் மேடைகளிலும் பகிரங்க வாக்குறுதி வழங்கிய நிலையில் அதனை கட்டயம் செய்ய வேண்டிய நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

19வது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில குறைவுகள் செய்யப்பட்டாலும் ஏற்கனவே குறிப்பிட்ட பகிரங்க வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். என்பதில் ஜனாதிபதி உட்பட பல தரப்புக்களிலிருந்தும் முனைப்புக்காட்டப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முறைமையில் சிறுபான்மையின் பலம்
ஜனதிபதியின் அதிகாரம் நியாயமான சீர்திருத்தத்திற்கு உட்படுவதில் சிறுபான்மையினருக்கு முரண்பாடு இருக்கமுடியாது. ஆனால் சிறுபான்மையினருக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்களை தெரிவு செய்கின்ற உரிமையைவிட்டுக் கொடுக்க முடியாது என்பதே சிறுபான்மைகளின் அடிப்படை நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி தேர்தல் முறைமையின் படி ஜனாதிபதியாக வருகின்றவர் 50விகிதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். இந்தநாட்டில் சிங்கள பெளத்தர்கள் 70 விகிதம் வாழ்கின்றார்கள். (இவர்களில் தேசிய விகிதாசாரத்தில்) 50 விகிதத்திற்கு அதிகமானோர் ஒரு பக்கம் சாய்வது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமானாலும் நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை. எனவே சிறுபான்மையினரின் தயவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வர நினைக்க முடியாது.

யுத்த வெற்றியின் அலையினை தவறாக புரிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்று நிரந்தரமாக ஜனாதிபதியாக இருக்கலாம் என தப்புக்கணக்கு போட்டார். சிங்கள பெளத்தர்கள்பெரும்பான்மையாக அவருக்குதான் வாக்களித்தார்கள். ஆயினும் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் அவரால் ஜனாதிபதியாக முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

இதே ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பொழுது அறிமுகப்பட்டிருந்தால் பெரும்பாலும் SWRD.பண்டார நாயக்க தனிச்சிங்கள சட்டத்தினை கொண்டு வந்திருக்கமாட்டார். ஏனெனில் தமிழ் பேசும்மக்களின் வாக்குகள் அவருக்கு தேவைப்பட்டிருக்கும். இந்த நாடும் முப்பது வருட யுத்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்காது.
தனிச்சிங்கள சட்டத்தினை விடவும் மிக ஆபத்தான ஒன்றுதான் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 12 ½ விகிதாசார தேர்தல் வெட்டுபுள்ளியும், 5விகித ஏனைய தேர்தலுக்கான வெட்டுப்புள்ளியுமாகும்.

தேசியக் கட்சிகளில் முஸ்லிம் பிரதி நிதித்துவங்கள் பேசாமடந்தைகளாக இருந்த நிலைமை முஸ்லிம் வாலிபர்களை விரக்த்தியின் விளிம்பிற்குள் தள்ளி 80களின் நடுப்பகுதியில் அவர்களும் ஆயுத இயக்கங்களில் சேர்ந்தது வரலாறு.

இந்திய அமைச்சர்களான சிதம்பரமும், பண்டாரியும் இலங்கையில் முஸ்லிம்கள் என்ற ஒரு தனித்துவ சமூகம் ,இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களும் தமிழர்களே. தமிழர்களுக்குள் கோவிலுக்கு செல்கின்ற, தேவாலையத்திற்கு செல்கின்ற, பள்ளிவாயலுக்கு செல்கின்ற தமிழர்கள் இருகின்றார்கள். மொத்தத்தில் உங்கள் வணக்கஸ்தளங்கள் வித்தியாசமே தவிர நீங்களெல்லாம் தமிழர்களே என்று நமது தனித்துவத்தினை அன்று இந்திய அரசு ஏற்க மறுத்த பொழுது அதனை வாய் மூடி மெளனியாக கேட்டுக்கொண்டு திரும்பி வந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இருந்த ஒரு காலத்தில்தான் எமது வாய்களுக்கு போடப்பட்ட பூட்டுக்கள் உடைதெறியப்படவேண்டும் என்றும் எமது கைகளுக்கும் கால்களுக்கும் போடப்பட்ட அடிமைச் சங்கிலி தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற கோசத்துடன் நமது தனித்துவ பயணம் அன்று ஆரம்பித்தது.

அதனால்தான் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் “முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத போராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்படாமல் தடுத்தது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வருகை “என அடிக்கடி கூறினார். இவ்வாறு ஒரு தனிக்கட்சி உருவாகி இருந்தாலும் அன்றைய 12 ½ விகித வெட்டுப்புள்ளி 5விகிதமாக குறைக்கப்படாமல் இருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே தனித்துவ அரசியல் ஒருபோதும் சாத்தியப்பட்டிருக்காது. அதுபோலவே இன்று தேசிய தலைவர் பதவிக்கு சிலர் ஆசைப்படுவதற்கு சந்தர்ப்பமே இருந்திருக்காது.

ஜனாதிபதி தேர்தல் முறைமை என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் 1989ம் ஆண்டு இது சாத்தியப்பட்டிருக்காது. மறைந்த ஜனாதிபதி பிரேமதாச முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்காகவே மறைந்த தலைவருடைய கோறிக்கையினை ஏற்று 12 ½ விகிதத்தினை5 விகிதமாக்கினார். இதைத்தான் பேரம் பேசும் சக்தி என்கின்றோம். துரதிஸ்ட்டவசாமக பேரம் சக்திக்கு வேறு அர்த்தம் தலைவரின் மறைவிற்கு பின் உள்வாங்கப்பட்டது வேறு விடயமாகும்.

இந்த பின்னணியில் தான் ஜனாதிபதி எனும் பதவி இருக்கும்வரை ஜனாதிபதியானவர் சிறுபான்மைகளை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸ்ச கற்றுக்கொண்ட பாடத்தின் பின்னணியில் எதிர்காலத்தில் இன்னும் கவனமாக இருப்பார்கள். இந்நிலையில் இச்சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பினூடாக இல்லாமலாக்கப்பட போகின்றது. ஆகவே இதை தடுத்து நிறுத்த நாங்கள் செய்ய போவது என்ன?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒப்பந்தத்தினூடாக இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தது. மறு வார்த்தையில் கூறுவதாயின் பேரம்பேசக்கூடிய சூழ் நிலை இருந்தது. ஏதோ பேசினார்கள், தனக்காக பேரம் பேசினார்கள். சமூகத்திற்காக பேரம் பேச தவறிவிட்டார்கள்.அதனால்தான் நாங்கள் இன்று அங்கலாய்க்கின்றோம். பரவாயில்லை. இப்பொழுதாவது நம்மால் முடிந்ததை செய்வோம். பஸ் போன பின் கை காட்ட வேண்டாம்..

3ம் பாகம் தொடரும்..

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY