கிழக்குக்கு தனி அலகு, தென்னிலங்கை முஸ்லிம்கள் நட்டாற்றில் வரும் செயற்பாடு: ஏ.எச்.எம்.அஸ்வர்

0
195

எங்களுக்கு தனி அலகு தந்தால் வடக்கையும் கிழக்கையும் இணைத்த மாகாணமாக நாங்கள் அங்கீகரிக்க விரும்புகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கூறியிருப்பது தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களை நட்டாற்றில் விடும் செயற்பாடு என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்பொழுது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு தனி அலகு தந்தால், வடக்கையும் கிழக்கையும் இணைத்த மாகாணமாக நாங்கள் அங்கீகரிக்க விரும்புகின்றோம் என சுஷ்மா சுவராஜிடம் சிலர் கூறி இருக்கின்றார்கள். இது ஒரு மட்டரகமான பேச்சு. ஏனென்றால், வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என்று மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அடித்து உறுதியாகக் கூறி இருக்கின்றார். ஆகவே, வேறு அலகு தந்தால் ஏனைய பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கும் இன்னொரு அலகு கொடுக்க வேண்டுமா? ஆகவே, இதனை நன்றாக யோசித்து நாங்கள் முடிவு எடுக்க வேண்டும்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூட இது பற்றித் தெரிவிக்கையில் ,
முஸ்லிம்களுடைய இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் பக்குவமாகச் சிந்தித்து அவர்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றும் வண்ணம்தான் இதில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

இதேநேரம், ஏனைய மாகாணங்களில் அதாவது, சிங்களப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை மட்டும் கருதாது ஏனைய மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களையும் ஒன்று சேர்த்து எல்லோரும் ஒரு சமூகமாக ஒரு நாட்டின் இனமாக மாத்திரமே கவனத்தில் எடுக்க வேண்டுமே தவிர, வடக்கு கிழக்குக்கு ஒரு முஸ்லிம் வகுப்பினர் தெற்குக்கு இன்னொரு வகுப்பினர் என கணக்குப் போடுவது பெரும் தப்புக் கணக்காகத்தான் முடியும் என்றார்.

எம்.எஸ்.எம்.சாஹிர்

LEAVE A REPLY