(Poem) கருப்பு வெள்ளை & கலர் டீவி

0
114

imagesஎழுபதுகளின்
இறுதிப் பகுதி.

கூட்டாளியிடம் சொன்னேன்
கொழும்பில புதுசா
பெரிய ரேடியோவில
பேசும் போது
ஆட்கள் எல்லாம்
அப்பிடியே தெரியுதாம்.

கேட்டுக் கொண்டிருந்த
கிறுக்கன் கேட்டான்.
ஒரு ஆள் முகமெனில்
ஓரளவு காட்டலாம்.

இரண்டு பேர்க்கு மேல
எப்பிடிக் காட்டுற.
விடை தெரியாமல்
விளையாடுவமா என்று
பேச்சை மாற்றி
பிழைத்துக் கொண்டேன்.

ஆறேழு மாதங்கள்
அப்படியே ஓடின.
ஒரு தெருவுக்கு
ஒரு வீடு என
ஊருக்குள் டீவி
உள்ளே வந்தது.

மதிர்ஸா விட்டதும்
மகா சந்தோசத்துடன்
ஓடிப் போவோம்
உட்கார்ந்து பார்க்க.

பலரும் இருந்து
பார்க்க வசதியாய்
கதவுக்கு நேரே
காட்சிப் பெட்டியை
வைத்து இருப்பார்
வாசலில் இருப்போம்.

ஆறு மணிக்கு
அலை வரிசை தொடங்க
ரொம்ப நேரம்
ரூபவாஹினிக் கொக்கு
அசையாது இருக்கும்.
ஆனாலும் இருப்போம்.

கரண்டு குறைய
கன்றாவி ஸ்கிரீன்
முரண்டு பிடிக்கும்
மூலையால் நெளியும்.

இருந்தாற் போல
இருந்த கொக்கு
வித்தியாசமாய்த் தெரிய
விசில்கள் பறக்கும்.

விலகிய சிக்னல்தான்
வித்தியாசம் தந்தது
என்று தெரிந்த பின்
ஏமாற்றம் மிஞ்சும்.

இரண்டு மூன்று மணிகள்
எதிர்பார்த்திருந்த பின்
மப்பட் ஷோ எனும்
மசிரு ஷோ ஒன்று
ஓயாமல் கதைக்கும்
பொறுமையை வதைக்கும்.

இன்னுமொரு வருடம்
எப்படியோ ஓட
டீவி வாங்குதல்
தீவிரமனது.

சொத்துக் கூடியோர்
சோனி டிவி வாங்க
குறைந்த வசதிக்கு
கோல்ட் ஸ்டார் டிவி
ஹாஜிமார் வீட்டில்
கலர் டீவிகள்
கனக்க வீட்டில்
கறுப்பு வெள்ளை.

சிங்கள நிகழ்ச்சிகள்
சிங்கம் போல் சீற
தமிழில் நிகழ்ச்சிகள்
தத்தித் தவழும்.

புதன் காலையே
புது ரத்தம் பாயும்
இன்று இரவு
இலக்கம் 103
லலிதா வழங்கும்
படத்தைப் பார்க்க
கச்சான் கொட்டையை
கணக்காய் வறுத்து
இஞ்சிப் பிலேண்டியும்
ஏற்பாடு செய்து
எல்லோரும் கூடி
எதிர் பார்த்திருப்பார்.

காவி உடையில்
பாவி ஒருத்தன்
கதைப்பான் கதைப்பான்
காதைக் கிழிப்பான்.

அதற்குப் பிறகு
அப்துல் ஹமீது
குரலைக் கேட்க
குதூகலம் பிறக்கும்.

கன்றாவி நாட்களில்
காவி முடித்த பின்
இன்று தமிழ்ப்படம்
இல்லை என்று
அறிவித்தல் போட
அடிக்கிற சாபத்தில்
ரூபவாஹினிக் காரன்
ரோட்டில சாவான்.

கரண்டு போனால்
கலவரம் வெடிக்கும்
பவர் ஹவுஸ் ரோட்டில்
பைத்தியம் பிடிக்கும்.

காலங்கள் ஓட
காட்சிகள் மாற
மார்க்க அறிவு
மனிதர்க்கு வளர
போண்களின் பாவனை
பொங்கி எழும்ப
டீவி பார்த்தல்
டிம்மாகி வருகிறது.

MOHAMED NIZOUS-

LEAVE A REPLY