விழித்திருக்கும்போது கண்ணைப் பிடிங்கும் நல்லாட்சிக்குள் நாம் போராட வேண்டியிருக்கின்றது: நஸீர் அஹமட்

0
223

விழித்திருக்கும்போது பார்வையையும் பறித்து கண்களையும் பிடிங்குகின்ற நல்லாட்சி எனப்படும் ஒரு மாய சூழ் நிலைக்குள் இருந்து கொண்டுதான் நாம் உண்மையான நல்லாட்சிக்காகப் போராட வேண்டியிருக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் சமூக ஆளுகையை வலுவூட்டுவதற்கான கொள்கைப் பரிந்துரைகள் Launching of project “Strengthening Policy & Action through Citizens’ Engagement” (SPACE) in the Eastern Province) எனும் தொனிப் பொருளியில் இடம்பெற்ற செயற்பாட்டுத் துவக்க நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையோடு ஜனதாக்ஸன் மற்றும் கெயார் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் ஆகியவை இணைந்து கிழக்கு மாகாணத்திலும் இலங்கையின் ஏனைய மகாணங்களிலும் அமுல்படுத்த உத்தேசித்துள்ள இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை 09.02.2016 திருகோணமலை புளு சினமன் உல்லாச விடுதியில் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் எஸ். சிவகுமார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், உட்பட சுமார் 45 அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறியதாவது,

மாகாண சபை முறைமைகளை வழங்கி அதிகாரப் பகிர்வு இடம்பெற்று விட்டதாக ஒருபுறம் கூறிக் கொண்டாலும் உண்மையாகவே அந்த அதிகாரப் பகிர்வுகள் இடம்பெறாததால் இன்னமும் குழப்பங்கள் நிலவுகின்றன.

13வது அரசியல் திருத்தத்திலே பல மர்ம முடிச்சுக்கள் இருந்து மாகாண சபை நிருவாகத்தைக் குழப்பி வருகின்றன. இந்த மர்ம முடிச்சுக்கள் முதலில் அவிழ்க்கப்பட வேண்டும்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக அரசியலமைப்பிலே தெளிவாகச் சொல்லப்பட்ட அதிகாரங்களைக் கூட தர மறுக்கின்ற அல்லது தந்த அதிகாரங்களைப் பறித்தெடுக்கின்ற போக்கு இன்னமும் மத்திய அரசிலும் மத்திய அமைச்சர்டகளிடமும் இருந்து கொண்டிருக்கின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாகாண சபையில் அமர்ந்திருக்க மக்களால் தெரிவு செய்யப்படாத அதேவேளை ஜனாதிபதின் பிரதிநிதியாக எங்கிருந்தோ இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு வந்து பதவியிலமர்த்தப்பட்ட மாகாண ஆளுநர் என்பவர் மாகாண சபை நிருவாகத்தைக் கட்டுப்படுத்துகின்ற ஒருவராக வலம் வருகின்றமை அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் எமக்குப் பெருந்தடையாக உள்ளது.

தலையிடியாக இருக்கும் இந்த ஆளுநர் பதவி என்பது ஏன் எதற்காக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.எனவே, இந்த ஆளுநர் பொம்மை அதிகாரம் என்பது அரசியல் மறுசீரமைப்பிலே சீர் செய்யப்பட வேண்டும். உண்மையான அதிகாரப் பகிர்வு இதய சுத்தியுடன் இடம்பெற வேண்டும்.

இந்த நிகழ்வில் கிழக்கு மகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண சபை பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்தன, விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், காணியமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உள்ளிடடோரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் பயிற்சி இணைப்பாளர் எஸ் சிவகுமார், சிரேஷ்ட முகாமையாளர்களான அசோக அஜந்த, கமால் கெகுளந்தர ஆகியோருட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY