சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?

0
295

நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிருநீரகங்கலாகும்.

அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள்.

இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (CRYSTALS) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது.

நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும்.

முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம்.

ஒருவருக்கு, ஒருமுறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

சிறுநீர் கற்கள் அறிகுறிகள்

சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும்.

இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும்.

வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க

அதிகமான பழங்கள் , அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.

முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல். குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.

குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம்.

சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY