காத்தான்குடி தள வைத்தியசாலையில் ஆளணியினர் 105 பேருக்கு தேவைப்பாடு: எம்.எஸ்.எம். ஜாபீர்

0
182

மட்டக்கப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி தள வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணிப் பற்றாக்குறை திருப்தியான வைத்திய சேவைக்கு ஒரு சவாலாக இருப்பதாக வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் புதனன்று (10.02.2016) தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை பற்றி மேலும் தெரிவித்த அவர்,

தற்போது காத்தான்குடி வைத்தியசாலையில் 110 ஆளணியினரே கடமை புரிகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையில் சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதாயின் மேலும் குறைந்தது 18 வைத்தியர்கள், விஷேட வைத்திய நிபுணர்கள் 04 பேர், தாதி உத்தியோகத்தர்கள் 30 பேர், மருத்துவ மாதுக்கள் 06 பேர், கண்காணிப்பாளர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 30 பேர், மருந்தகர்கள் 05 பேர் என்ற அடிப்படையில் மேலும் 105 ஆளணியிராவது தேவை என்று குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையில் பொதுமக்களின் நிதியுதவியுடன் சுமார் 5 மில்லியன் ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக விரைவில் நோயாளர்கள் நலனுக்காக கையளிக்கப்படும் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் மேலும் கூறினார்.

இரத்த வங்கி, உளநலப் பிரிவு, என்பன அடுத்த இருவாரங்களுக்குள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு நோயாளர்களின் நலனுக்காக செயற்படத் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, காத்தான்குடி தள வைத்தியசாலையில் பால்நிலை சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவொன்றும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏ.எச்.ஏ. ஹு ஸைன்

LEAVE A REPLY