புதிய அரசியல் யாப்பு விடயத்தினை முஸ்லிம்கள் மூன்று தளங்களில் நின்று நோக்க வேண்டும்: அப்துர் ரஹ்மான்

0
254

“சமகால அரசியலில் சூடான அரசியல் தலைப்பாக அரசியல் யாப்பு விடயம் மாறியிருக்கிறது. இவ்விடயத்தினை இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மூன்று வெவ்வேறு தளங்களில் நின்று பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு பார்ப்பதன் ஊடாகவே சரியான யதார்த்தமான தீர்மானங்களை எடுக்க முடியும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான ஆய்வுக் கருத்தரங்கொன்று கடந்த 07.02.2016 அன்று காத்தான்குடியில் நடை பெற்றது. பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இவ்வாய்வுக் கருத்தரங்கில் உரையாற்றும்போதே NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

“யாப்புத் தொடர்பான கலந்துரையாடல்களும், விவாதங்களும் தற்போது தீவிரமடைந்துள்ளன. உண்மையில் அரசாங்கத்தின் நோக்கம் யாப்புத் திருத்தமா அல்லது புதிய யாப்பு உருவாக்கமா என்பது கூட உத்தியோக பூர்வமாக அரசாங்கத்தினால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஜனவரி 9ஆம் திகதி பிரதமர் அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் பிரேரணையின் வாசகங்களையும், தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்களின் தலைப்புகளையும் பார்க்கும் போது புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

இலங்கையின் யாப்பு என்பது ஏறத்தாள 183 வருட வரலாற்றைக் கொண்டது. இலங்கைக்கான யாப்பினது முதல் ஆவணம் 1883 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இருந்தாலும் 1947 இல் உருவாக்கப்பட்ட ‘சோல்பரி யாப்பு’ எனப்டுவதே இலங்கையின் யாப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். பின்னர் அவை 1972 இலும் 1978 இலும் புதிய புதிய யாப்புகளாக உருமாற்றம் பெற்றன.

தற்போது பேசப்படும் யாப்புத் தொடர்பான விடயங்கள் மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டதாகும்.ஜனாதிபதி முறையை மாற்றியமைத்தல், தேர்தல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தல், மற்றும் அதிகாரப் பரவலாக்கல் என்பனவே அந்த மூன்று விடயங்களுமாகும்.

இவ்விடயத்தினை இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மூன்று வெவ்வேறு தளங்களில் நின்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதில் முதலாவது நாமும் இலங்கையின் குடிமக்கள் என்ற வகையில் இதனை நோக்க வேண்டும்.

இரண்டாவதாக நாம் இந்த நாட்டில் வாழும் பலவகை சிறுபான்மைகளில் ஒரு அங்கம் என்ற அடிப்படையில் இதனைப் பார்க்க வேண்டும். மூன்றாவதாக நாம் முஸ்லிம் சமூகத்தின் தளத்தில் நின்று இதனை நோக்க வேண்டும். இவ்வாறு பார்ப்பதன் ஊடாகவே சரியான யதார்த்தமான தீர்மானங்களை எடுக்க முடியும்”

இவ்வாய்வுக் கருத்தரங்கில் காத்தான்குடியின் பல அரசியல் பிரமுகர்களும், புத்திஜீவிகளும், சட்டத்தரணிகளும் கருத்துரைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி​)

LEAVE A REPLY