(Video) அமைச்சர்களான றிசாட்டும், ஹக்கீமும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சிப்லி பாரூக்

0
335

முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தி இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காவும், அரசியல் காய் நகர்த்தல்களை கட்சிதமான முறையில் முன்னெடுத்து வருகின்ற எங்கள் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அமைச்சர் றவுப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையான அமைச்சர் றிசாட் பதுர்டீனும் வரப்போகின்ற புதிய அரசியல் அமைப்பு மாற்றங்களில் சிறுபான்மை சமூகமாக இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் விடயத்தில் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மேற்கண்டவாறு அவருடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் றிசாட் வெளியிட்ட அறிக்கையில் தான் முஸ்லிம்கள் சம்பந்தமான அரசியல் அபிலாசைகள், உரிமைகளைப்பற்றி பேசுகின்ற பொழுது முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக கூறிய விடயத்தினை நான் பெரிதும் மதிப்பதோடு அவருடைய அந்த கருத்தானது, மானசீக ரீதியான கருத்தாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

அந்த வகையில் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளுக்கிடையில் பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், நாங்கள் எந்த சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருக்கின்றோம் என்ற நிலையில் அந்த சமூகத்தினை பற்றிய நன்மையான விடயங்களைப்பற்றி பேசுகின்ற பொழுது கண்டிப்பாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து செயற்படுவதனாலேயே அதிகளவில் 30வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளையும் ,உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்பது எனது கருத்தாக இருக்கின்றது.

மறுபுறத்தில் பார்க்கின்ற பொழுது அமைச்சர் றிசாட் பதுர்டீன் ஒரு கட்சியின் தலைவராக இருந்தலும் கூட அவரினை அரசியலுக்குள் உள்வாங்கி அவரினை அரசியல்வாதியாக உருவாக்கியது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசேயாகும்.

அந்தவகையிலே எங்களுடைய முஸ்லிம் சமூகத்திற்கு அரசியலினை கற்றுத்தந்து எங்களுடைய உள்ளத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரஃபின் பாசறையில் வளர்க்கப்பட்ட தற்போதைய எங்களுடைய தலைவர் றவூப் ஹக்கீம் மிகவும் நிதானமான போக்குடையவாராக செயற்பட்டு வரும் ஒரு தலைவராக இருக்கின்ற படியினால் அமைச்சர் றிசாட் பதுர்டீன் மாத்திரமல்ல முஸ்லிம்களைப்பற்றி பேசுகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்களின் உரிமைகளை வெள்ளுகின்ற விடயத்தில் ஒரே குடையின் கீழ் நின்று செயற்பட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் போட்டியிட்ட உங்களுடைய பெயர் ஏன் தேசியப்பட்டியல் விடயத்தில் பேசப்படுவதில்லை என வினவியதற்கு விடையளித்த சிப்லி பாரூக், தேசியப்பட்டியல் சம்பந்தமாக கதைக்கின்ற பொழுது ஆரம்பத்திலேயே தேசியப்பட்டியல் கேட்கின்ற வரிசையில் நான் நிற்கமாட்டேன் என தலைவரிடத்தில் மிகத்தெளிவாக கூறியிருந்தேன்.

அதற்கான முக்கிய காரணமாக நான் கூறிக்கொள்ள விரும்புவதாவது, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அதிகாரம் அல்லது பிரதிநித்தித்துவம் கிடைக்கப்பெறுகின்ற பொழுதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற என்னப்பாடு எங்களுக்கு உணர்ச்சி பூர்வமாக ஏற்படும்.

அப்படியில்லாமல் மக்கள் எங்களை தோற்கடித்ததற்கு பிற்பாடு நாங்கள் தேசியப்பட்டியல் ஊடாக அல்லது யாருடையாவது சலுகைகளை பெற்றுகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு பின்னால் சென்று முடிந்தளவு கெஞ்சி, கூத்தாடி தேசியப்பட்டியலினை பெற்றுக்கொள்ளும் பொழுது உளவியல் ரீதியாக சில வேலைகளில் மக்கள் எங்களை புறக்கணித்தவர்கள்தானே என்றும், அவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதில்லை என்ற நிலைப்பாடு ஏற்படும் அதே நேரத்தில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருகின்ற காலகட்டத்திற்குள் அரசியல்வாதிகள் கூறுவதைப்போன்று மக்களுக்கு பல வகையான உறுதி மொழிகளை வழங்கி, சில்லறை சாமான்களையும் வழங்கி, வாக்குகளை பெற்று மீண்டும் பாராளுமன்ரத்திற்குள் சென்று என்ற சிந்தனை சர்வசாதாரனமாக ஏற்படும்.

மட்டக்களைப்பில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகின்ற கல்குடாவிற்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவமானது கொடுக்கப்படுக்கின்ற பொழுது நான் சந்தோசம் அடைவேனே தவிர அதனை தடுத்து நிறுத்தும் செயற்பாட்டில் ஒரு பொழுதும் நான் இருக்க மாட்டேன் என்பதனை இங்கு கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

அதே போன்று கத்தான்குடியில் எங்களுடைய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஃமானுக்கு கொடுத்தாலும் கூட சண்டை பிடிக்கவோ அல்லது அதனை தடுத்து நிறுத்த முற்படவும் போவதில்லை.

தேசியப்படியல் விடயம் என்பதானது தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவாகும். ஆகவே கட்சியில் தலைமைத்துவத்திற்கு கீழ் செயற்படுகின்றவர்கள் என்ற ரீதியில் நாங்கள் தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவிற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்ற முடிவில் நாங்கள் திடமாக இருக்கின்றோம்.

போன்ற கேள்விகளுக்குன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் அளிக்கப்பட்ட விடைகளின் விரிவான காணொளியானது எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY