பாகிஸ்தானில் இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றக் குழு ஒப்புதல்

0
271

பாகிஸ்தானில் சுமார் பத்து ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு விரைவில் தனி திருமண சட்டம் உருவாகும்.

பாகிஸ்தானில், முஸ்லிம்களின் திருமணச் சட்டம் மட்டுமே அமலில் உள்ளது. சிறுபான்மையினராக வாழும் சில லட்சம் இந்துக்களுக்கு தனியான திருமணச் சட்டம் இல்லாததால் அவர்களின் திருமணங்களுக்கு சட்டப்படியான அங்கீகாரம் இல்லை.

இதுதொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சுமார் 10 ஆண்டு இழுபறிக்குப் பிறகு இந்து திருமண சட்ட மசோதா-2015ன் இறுதி வரைவுக்கு சட்டம் ஒழுங்கிற்கான பாராளுமன்ற நிலைக்குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண் மற்றும் பெண்களின் திருமணத்திற்காக குறைந்தபட்ச வயது 18 மற்றும் நாடு முழுவதும் இந்த சட்டம் பொருந்தும் என்ற இரண்டு திருத்தங்களுக்குப் பிறகு நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆதரவு தெரிவிப்பதால், இந்த சட்ட மசோதாவானது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY