அரசியல் அமைப்பு மாற்றச் சட்டம்: பாகம் – 01

0
210

புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்புச்சட்டம் சம்பந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாலர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் மக்களை விழிப்பூட்டும் அடிப்படையில் தொடர் பாகங்களாக எழுதும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் சம்பந்தமான கட்டுரை.

அரசியல் அமைப்பு சட்டம் மாற்றம் இன்று நாட்டின் பிரதான பேசும் பொருளாக மாறிவருகின்றது. பொதுமக்களிடத்திலிருந்து இது தொடர்பான கருத்துக்களை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக 24பேர் கொண்ட குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முஸ்லிம் சமூதாயம் போதியளவு விளிப்படைந்திருக்கின்றதா? மாற்றப்பட இருக்கின்ற அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் மீது நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள் எவை? அவைகள் எந்தவிதத்தில் இடம் பெற்றால் முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற விடயங்களில் தெளிவுகள், ஒருமித்த கருத்துக்கள் ஏற்பட்டுள்ளனவா?

இன்று சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவராவது வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தால் அவர்களை சந்தித்து முஸ்லிம்களின் நலன்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனக்கூறியதாக அறிக்கைகளை விடுகின்றார்கள். அவர்கள் கூறிய அந்த நலன்கள் என்ன? அவைகளைப்பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடுவதில்லை. காரணம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நாங்களும் பேசியிருக்கின்றோம் என்று கூற வேண்டும் என்பதற்காக அறிக்கை விடுகின்றார்கள்.

இன்னும் சில முஸ்லிம் கட்சிகள் வடகிழக்கு இணைப்பிற்கு நிபந்தனையுடன் உடன்பட தயார் என வெளிநாட்டு பிரமுகர்களிடம் கூறியதாகவும் அறிக்கை விடுக்கின்றனர். வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம்களுக்கு சாதகமானதா? அல்லது பாதகமானதா? என முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தினை கோரினார்களா? அது தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகின்ற சாதக பாதக விடயங்களைப்பற்றி சிந்தித்தார்களா? அல்லது முஸ்லிம் சமூகமாவது சிந்திக்கதயாராக இருக்கின்றதா? என்ற கேள்விகள் ஒரு புறம்இருக்க மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த வடகிழக்கைப்பற்றியும் சமஸ்டியைப்பற்றியும் அதிகமாக பேசுகின்றார்கள்.

சில விடயங்களில் மறைமுகமாக இவர்களுக்கு உத்தரவாதங்கள் கிடைத்திருப்பதாகவும் ஊகங்கள் நிலவுகின்றன. அடுத்த புறத்தில் இந்தியா என்ற வல்லரசும் மேற்கத்திய அரசுகளும் தமிழ் தரப்பிற்கு பக்கபலமாக இருக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் இந்த சக்திகளுக்குபின்னால் மிக வேகமாக செயற்பட்டுகொண்டிருக்கின்றார்கள் என்ற கருத்துக்கள் மிக வேகமாக உலாவுகின்றது.

இவ்வாறு அரசியல் அமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரபரவலாக்கல் போன்ற விடயங்களில் பல சக்திகள் வேகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் சிலர் ஆங்காங்கே அக்கறைகளை காட்டினாலும் பாரியளவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிர்புணர்வு ஏற்படவில்லை. கட்சிகளுக்கு வாக்களித்ததோடு தமது பணி முடிவடைந்து விட்டது, மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பதுவே பலரது நிலைப்பாடாக இருக்கின்றது.

தாம் வாக்களித்து தெரிவு செய்தவர்களில் எத்தனை பேர் வரவிருக்கின்ற அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரபரவலக்கல் போன்ற விடயங்களில் ஆழமான அறிவினை அல்லது அகலமான தெளிவினை கொண்டிருகின்றார்கள்? அல்லது இவ்விடயங்கள் சமபந்தமாக பாராளுமன்றத்தில் எத்தனை பேர்கள் உரத்து குரல் கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள்? போன்ற விடயங்களை தெரிவு செய்கின்ற பொழுது முஸ்லிம் சமூகம் சிந்திக்க தவறிவிடுகின்றது.

இப்போதாவது கண்விழித்து அவர்களுக்கு பின்னால் உந்து சக்தியாக இருந்து தமது நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் படியாக உறுதி செய்வதற்கு தயாரா? என்பது தொடர்பாக எத்தனை பேர்கள் சிந்திக்கின்றோம்?

அரசியல்கட்சிகள் சமூகத்தினை புறக்கணித்து யார் யாரையோ திருப்திப்படுத்த முடிவுகளை எடுத்து அம் முடிவினை சமூகத்திற்கான சிறந்த முடிவென்று காட்ட முற்படுக்கின்ற பொழுது அம்முடிவுகள் உண்மையாகவே சிறந்ததா? அல்லது பாதகமானதா? என்பதைப்பற்றி சிந்திப்பதற்கும் அதுதொடர்பான தமது நிலைப்பட்டினை வெளிப்படுத்தி கட்சிகள் பிழையான முடிவுகளை எடுக்கின்ற பொழுது அவற்றினை மாற்றச் செய்வதற்கும் அல்லது கட்சிகள் பெயருக்கு சில உணர்ச்சி பேச்சுக்களை பேசி தங்கள் தொண்டர்களுக்கு முகநூல்களில் புகழ்பாட உற்சாகம் கொடுத்துவிட்டு அரசியல் அமைப்பு மாற்றத்தினால் என்னென்ன விடயங்கள் உள்வாங்கப்படவிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு கூட சக்தியில்லாமல் இருக்கின்ற பொழுது அவர்களை தட்டியெழுப்பி இவைகள்தான் முஸ்லிம் சமூதாயத்தின் நிலைப்பாடு இதனை போய் கூறுங்கள் என அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் சமூதாயத்திற்கு மத்தியில் தெளிவுகளையும் ஒருமித்த கருத்துக்களையும் ஏற்படுத்த ஏதாவது முயற்சிகள் நடக்கின்றனவா? என்பவைகள்தான் இன்று எம்முன்னால் உள்ள கேள்விகளாகும்.

எனவேதான் இத்தொடர் கட்டுரை மூலமாக உத்தேசிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றப்படவிருக்கின்ற பிரதான அம்சங்கள் என்ன? அவை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுதப்போகின்றது? அத்தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள எவ்வகையான முன்மொழிவுகளை முன்வைக்கலாம்? போன்ற விடயங்களை சமூகத்தின் முன்முன்வைக முயற்சிக்கப்படுகிறது.

இதற்கான பிரதான காரணம் இந்த அரசியல் அமைப்பு சட்டமானது முஸ்லிம்களை பொறுத்தவரையில் காரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதாகும். இதில் நமக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அப்பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய நூறு ஆண்டுகள் கூட போகலாம்.

அதே நேரம் எமதுஅரசியலைப் பொறுத்தவரையில் அரசியல் அமைப்பு மாற்றத்தினை சிந்திக்கக் கூடிய போதுமான அளவு பிரதிநிதித்துவங்கள் இல்லாமை ஒரு புறமிருக்க ஓரளவு சிந்திக்கக்கூடிய பிரதி நிதித்துவங்கள் வேறு சக்திகளின் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டு தமது எஜமான்களின் நிலைப்பாட்டை தமது சமூகத்தின் நிலைப்பாடாக காட்டி சமூதயத்தினை திசை திருப்பக்கூடிய நிலைமையகும்.

எனவே உறுதியான சமூக நிலைப்பட்டினை மிகவிரைவாக கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம்இருக்கின்றது. அதற்கான ஒரு பங்களிப்பாக இத்தொடர்கட்டுரை இடம்பெறுகின்றது.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்படயிருக்கின்ற பிரதான அம்சங்கள்
—————————————————–
Nature of the State -நாட்டின் தன்மை,

Form of Government ( presidential/parliamentary) ஜனாதிபதி ஆட்சியா? அல்லது பாராளுமன்ற ஆட்சியா?

Legislature (unicameral/bicameral) -பாராளுமன்றம் ஒரு சபையினை கொண்டதா? அல்லது இரு சபைகளை கொண்டதா?

Supremacy of the Constitution or Parliament-அரசியல் அமைப்பு சட்டம் மீயுயர் தன்மை கொண்டதா? பாராளுமன்றம் மீயுயர் தன்மை கொண்டதா?

Court Structure- நீதிமன்ற கட்டமைப்பு.

Constitutional Court-அரசியல் அமைப்பு நீதிமன்றம்,

Power sharing and devolution-அதிகார பகிர்வு மற்றும்அதிககார பரவலாக்கல்.

Constitutional Council and Independent Commissions-அரசியல் அமைப்புச் சபை மற்றும் சுதந்திரஆணைக்குழுக்கள்.
Electoral Reforms-தேர்தல் சீர்திருத்தம்.

இவைகள் முஸ்லிம்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஆங்கில சொற்களுக்கான தமிழ் பதங்கள் அவற்றின் உரிய பதங்களாக ( கலைச்சொற்களாக) இல்லாவிட்டாலும் ஆங்கிலப் பதங்களை இலகுவாக புரிந்துகொள்வதற்காக என்னால் தரப்பட்டுள்ள தமிழ் சொற்களாகும்.
தொடரும்……..

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY