தேர்தல் முறையில் மாற்றம் சிறுபான்மையினருக்கு பாதகமாகவே அமையும்: அமைச்சர் அமீர் அலி

0
135

தேர்தல் முறையில் மாற்றம் சிறுபான்மையினருக்கு பாதகமாகவே அமையும் ,இந்த தேர்தல் முறையானது வடக்கு கிழக்கு தாண்டி வாழுகின்ற தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு தமக்கான ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகக் குறைந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கின்ற முறையாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்

மலையக முஸ்லிம் கவுன்சிலின் (Upcountry Muslim Council) ஏற்பாட்டில் பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடனான வட்டாரங்களின் எல்லை பிரிப்பில் உள்ள பாதகங்கள் பற்றிய கலந்துரையாடல் பதுளை green mountain hotel இல் மலையக முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் முஸம்மில் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்றது,

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,

எதிர்வரும் காலங்கள் தேர்தல் முறையிலேயே மாற்றங்கள் செய்வதற்கான முஸ்தீபுகளிலே அரசு இறங்கியுள்ளது, அரசின் பங்காளிகள் என்ற வகையில் இதில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றி நாம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இருந்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தமது ஆலோசனைகளை அரசுக்கு முன் வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இந்த அரசு வழங்கியுள்ளது. அதனை நாம் சாதமாக பயன்படுத்த வேண்டும், கடந்த கால விகிதாசார தேர்தல் முறையிலே சிறுபான்மையினருக்கு சாதகமானதாக அவர்களின் பிரதிநிதியை ஏதாவது ஒரு கட்சிக்கூடாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது.

மாறாக தேர்தல் முறையிலேயே மாற்றமானது எந்த வகையிலும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதியை உறுதிப்படுத்துவதாக இல்லை. அத்தோடு வட்டாரப்பிரிப்பு முறையிலும் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்ற ஒரு போக்கை அஅவதானிக்க முடிகிறது, இதனை ஒட்டுமொத்த சிறுபான்மைக் கட்சியினரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும், அத்தோடு சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான மாற்றுவழிகள் பற்றி ஆராய வேண்டும், இந்த விடயத்தில் வெறுமனே அரசியல் வாதிகள் மட்டும் குரல் எழுப்புவதால் ஒன்றும் ஆகிவிடாது பொது மக்களும் இது தொடர்பில் ஒருமித்த நிலைபாட்டில் தமது கருத்துக்களை அரசுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் ஒன்றினைவானது சிறுபான்மையினருக்கும்,சிறுபான்மை கட்சிகளுக்கும் நல்லதை நினைக்கின்ற,நல்லதை செய்கின்ற எண்ணக்கருவினை கொண்டே செயலாற்றும் என நாம் இன்னும் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு கெளரவமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இந்த அரசின் நகர்வுகள் அமைய வேண்டும், இது தொடர்பில் எமது கட்சி அரசுக்குள் இருந்து கொண்டே ஒரு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம், எதிர்வரும் நாட்கள் சிறுபான்மையினர் தொடர்பில் இந்த அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை நாம் அறிய முடியும் என அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,அதிபர்கள், மலையக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் முஹம்மத் செய்யத் மற்றும் கல்வியியலாளர் அஜ்வதீன் இன்னும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY