தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
195

தொகுதி முறை தேர்தல் மூலம் பாராளுமன்ற முஸ்லிம் பிரதி நிதித்துவம் குறையுமென மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக நேற்று (07) நடாத்தப்பட்ட ஆய்வுக் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்துரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

“தற்போது 21 பேர் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

தொகுதி முறை தேர்தல் மூலம் இந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக்கூட பெற்றுக் கொள்ள முடியாது.

ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகுதி முறை தேர்தல் மூலம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்வத்தை பெறமுடியாது.

மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த போதிலும் முஸ்லிம்களின் 56,000 வாக்குகள் இருக்கின்றன. இந்த வாக்குகளினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாது.

அதே போன்றுதான் கல்குடாத் தொகுதியில் 66 வீதம் தமிழ் மக்களும் 34 வீதமான முஸ்லிம்களும் உள்ளனர். ஆனால் இந்த 34 வீத முஸ்லிம்களுடைய வாக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கல்குடாவுக்கு கொண்டு வராது.

ஒரு தொகுதியில் 35 வீதம் சிறுபான்மை மக்கள் வாழுகின்ற தொகுதியில் அங்கு இன்னுமொரு தொகுதியை ஏற்படுத்துமாறு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

அப்படி வந்தால் கூட கல்குடா தொகுதியில் 34 வீதமே இருப்பதால் இங்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறமுடியாது.

தற்போது ஏற்படுத்தப்படவுள்ள தேர்தல் முறை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை பாதிப்படையச் செய்யும்.

சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்த வரைக்கும் விகிதாசாரமுறையிலான தேர்தல் முறைமையே சிறந்ததாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

(Thinakaran)

LEAVE A REPLY