தைவான் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 6 மாதக் குழந்தை 30 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

0
178

தைவான் நாட்டின் தென்பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தைவானின் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது. இதில் தைனான் உட்பட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அப்பளம் போல நொறுங்கின.

இதில் 462 பேர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதில், 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

முதல் நாளில் 14 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்தது. அங்கு கட்டிட இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்திருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 90 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கோரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 6 மாத குழந்தை 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கத்தில் சிதைந்து விழுந்த கட்டடம் ஒன்றின் 5-வது மாடியில் அந்த குழந்தை தாயுடன் வசித்து வந்தது. இதேபோல், 20 வயது மிக்க இளைஞர் ஒருவர் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்டார்.

LEAVE A REPLY