தாலிக் கொடியைத் திருடி வங்கியில் அடகு வைத்தவர் கைது

0
174

4 பவுண் தாலிக் கொடியைத் திருடி வங்கியில் அடகு வைத்த நபரொருவரை வியாழக்கிழமை 04.02.2016 மாலை தாம் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி சீநோர் வீட்டுத் திட்டப் பகுதியில் வைத்து திருட்டில் ஈடுபட்ட 33 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்மாதுறை வாசிகசாலை வீதியிலுள்ள வீட்டில் யாருமில்லாத வேளை பார்த்து அங்கு சென்ற மேற்படி நபர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் தனது சைக்கிளைக் கொடுத்து ஓடிப் பழகச் சொல்லி விட்டு வீட்டிற்குள் புகுந்து அலுமாரியைத் திறந்து அதனுள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பவுண் தாலிக் கொடியை திருடிச் சென்றுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் வீட்டிற்கு வந்து தனது மகனிடம் நடந்ததை விசாரித்த வரதராஜா சுலோஜனா (வயது 40) எனும் தாலிக் கொடிக்குச் சொந்தக் காரி குறித்த நபர் வீட்டில் இருந்த தாலிக் கொடியைத் திருடிச் சென்றிருப்பதை பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை விசாரித்த போது அவர் திருடிச் சென்ற தாலிக் கொடியை செங்கலடியிலுள்ள வங்கியொன்றில் அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்நபரைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY