தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்படுவதனால் மாத்திரம் தமிழ் மக்களுக்கு பூரண விடிவு கிடைக்கப்போவதில்லை: செல்வேந்திரன்

0
199

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தன்று காலி முகத்திடலில் தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்படுவதனால் மாத்திரம் தமிழ் மக்களுக்கு பூரண விடிவு கிடைக்கப்போவதில்லை என தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமால் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று 4 வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகாமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரவிக்கையில்,

இன்றைய அரசாங்கம் நல்லாட்சி அரசாகவும் தமிழ் மக்கள் மீது கருணை கொண்டுள்ள அரசாகவும் இருந்தால் சிறைக் கூடங்களில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை இந்த சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ய வேண்டும்.

அது மட்டுமல்லாமல் காணாமல் போனவர்களை கண்டு பிடித்து மீட்டுத் தர வேண்டும் அல்லது அதற்குரிய தகுந்த பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட காணமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

ஏனெனில் காணாமல் போனோர் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் ரீதியாக சுமார் 2200க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்களை காணமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கு சமர்ப்பிந்திருந்தோம். ஆனால் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 425பேருக்கு மாத்திரம்தான் விசாரணை இடம்பெற்றுள்ளது ஏனையோருக்கு இடம்பெறவில்லை.

உண்மையில் இந்த அரசாங்கம் நல்லாட்சி செய்யும் அரசு என நிரூபிக்க விரும்பினால் காணாமல் போனோர் தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காணமால் போனோர் தொடர்பில் அவர்கள் இறந்து விட்டார்கள் என பத்திரிகையில் வாசித்தோம். குறித்த செய்தியை வன்மையாக கண்டிக்கிறோம். காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவது தவறாகும்.

ஆகவே 68வது சுதந்திர தினத்தன்று நாங்கள் அரசிடம் காணமல் போனோர் குடும்ப உறவுகள் சார்பாக கேட்டுக் கொள்வது காணமால் போனோரைக் கண்டுபிடித்துத் தருவது இந்த அரசின் கடமை அந்த விடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,காணாமல் போனோரின் உறவுகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY