முஸ்லிம் மாகாணம் தொடர்பில் மர்சூக் அஹமட் லெப்பை

0
270

முதன் முறையாக இலங்கையிலே மக்களால் வரையப்பட்ட ஒரு அரசியல் யாப்பு உருவாக்கப்படவிருக்கின்றது. இதற்காக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக நாட்டில் உள்ள சிவில் சமூகத்தினரின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் வாழாவிருந்திரக்கூடாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடகிழக்கு இரவோடு இரவாக இணைக்கப்பட்டது. இதனால் கிழக்கில் 40 ஆக இருந்த முஸ்லிம்களின் செறிவு வடகிழக்கு இணைப்பினால் 18மூமாக குறைக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமான விடயமாக பார்க்கப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் தமிழர்களினால் நசுக்கப்படுவார்கள் என அச்சம் வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் முஸ்லிம்களுடைய முதுகிலே குத்தி விட்டார்கள் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. எப்போதும் நமக்கு யாராவது முதுகிலே குத்த வருகிறார்கள் என்றால் நாம் திரும்பி நின்று நெஞ்சை கொடுத்து அந்த குத்தை நெஞ்சிலே வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் முதுகிலே குத்தி விட்டார்கள், முதுகிலே குத்தி விட்டார்கள் என்று காலமெல்லாம் அலறவேண்டியிருக்காது.

வடகிழக்கு இணைக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம்களால் கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்ற கோசமும் முன்வைக்கப்பட்டது. கிழக்கை பிரிப்பதாக இருந்தால் கிழக்கிலே ஒரு வாக்கெடுப்பு இடம்பெற்று அதன் மூலம் கிழக்கை பிரித்துக்கொள்ளலாம் என அந்த ஒப்பந்தத்திலே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சரத்தும் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயம். கிழக்கை பிரித்த பழி பாவத்தை முஸ்லிம்களின் மீது போடுவதற்கான ஒரு சதி இது. முஸ்லிம்களிடம் கேட்காமல் எவ்வாறு வடகிழக்கை இணைத்தீர்களோ அதே போல முஸ்லிம்களின் மேல் பழிவிழாமல் அதனை பிரித்துவிட வேண்டும் என மறைந்த மாமனிதர் அஷ்ரப் கூறினார்.

இந்தப்பழிகள் முஸ்லிம்கள் மீது விழாமல் இருக்க ஒரு தீர்வு திட்டத்தை அஷ்ரப் முன்வைத்தார். அது தான் இணைந்த வடகிழக்கின் முஸ்லிம்களுக்கான தனி அலகு. அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, நித்தவூர், அட்டாளச்சேனை, அக்கறைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம் போன்ற முஸ்லிம் கிராமங்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தாக்குடி, ஏறாவூர், ஓமட்டமாவடி, வாழைச்சேனை போன்ற முஸ்லிம் ஊர்களும் திருகோணமலை மாவட்டத்திலே மூதூர், கிண்ணியா, தோப்பூர் போன்ற முஸ்லிம் ஊர்களும் வடக்கிலே எரிக்கலம்பிட்டி, மூசலி போன்ற நிலத்தொடர்பற்ற இந்த முஸ்லிம் ஊர்களை உள்ளடக்கியதான நிருவாக முஸ்லிம் மாகாணம் ஒன்றை உருவாக்க வேண்டும் என அஷ்ரப் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இது இந்தியாவின் பாண்டிச்சேனையின் கட்டமைப்பினை ஒத்ததாக இருக்குமென அந்நேரம் பேசப்பட்டது.

இதற்கு அஷ்ரப்பினால் சொல்லப்பட்ட காரணமானது வடக்கிலிருந்து கிழக்கை பிரிப்பதனால் கிழக்கு மாகாணத்தில் எமது விகிதாசாரம் அதிகரிப்பது உண்மைதான் அப்படி 40மூ அதிகரிக்கின்ற எமது விகிதாசாரத்தை வைத்துக்கொண்டு தனியே கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது. ஏனெனில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதாக இருந்தால் நாங்கள் 51மூஆக இருக்க வேண்டும். எனவே எங்களுக்கு மிகுதியாக தேவைப்படுகின்ற 11மூ யும் சிங்களவர்களிடம் இருந்து பெற்று நாங்கள் ஆட்சியை அமைக்கலாம். அவர் இக்கருத்தை சொல்லும்போது தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் இடம்பெறும் காலம்.

புலிகளின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் முழுதாக பாதிக்கப்பட்டு தமிழர்களோடு முஸ்லிம்கள் பகைமை பாராட்டிய காலம் அது. அது மட்டுமல்லாது தமிழர்களோடு பகைத்துக்கொண்டு சிங்கள அரசாங்கத்தோடு சேர்ந்து செயற்பட்ட காலம் அது.

எனவே தான் சிங்களவர்களோடு சேர்ந்து கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்கள் கைப்பற்றலாம் என அஷ்ரப் கூறினார். மேலும் அவர் கூறினார் “இவ்வாறு சிங்களவர்களோடு சேர்ந்து முஸ்லிம்கள் ஆட்சியமைக்கும் விடயம் எவ்வளவு காலத்துக்கு என்பது கேள்விக்குறி. தற்போது சிங்களவர்களோடு இருக்கும் உறவு எவ்வளவு காலத்துக்கு நிரந்தரமானது? சிங்களவர்கள் காலப்போக்கில் முஸ்லிம்களை பகைத்துக்கொண்டு தமிழர்களோடு சேர்ந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்றினால் எங்களது நிலைமை என்னவாகும்? என கேள்வி எழுப்பி கிழக்கை பிரித்து சிங்களவர்களோடு சேர்ந்து தற்காலிகமாக முஸ்லிம்கள் கிழக்கை ஆழ்வதை விட இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி மாகாணமே முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்கும்” என அஷ்ரப் கூறினார்.
அஷ்ரப் கூறிய சூழல் 2000ஆம் ஆண்டுக்கு முதல். ஏனெனில் 2000ஆம் ஆண்டு அஷ்ரப் மரணித்துவிட்டார்.

அப்போது புலிகள் பலமாக அரசாங்கத்தோடு யுத்தம் செய்த காலம். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டிருந்த சூழல். அதாவது தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தம் செய்த சூழல். முஸ்லிம்கள் சிங்கள அரசாங்கத்தோடு இணைந்திருந்த காலம். கிழக்கும் வடக்கும் பிரிக்கப்படும் என்பதை அஷ்ரப் அக்கருத்தை சொல்லிருக்கும் வேளை நினைத்திருக்கவும் மாட்டார். ஆனால் கிழக்கு பிரிந்தால் கிழக்கில் நாம் சிங்களவர்களோடு சேர்ந்து ஆட்சியமைக்கலாம்.

சிங்களவர்களோடு எவ்வளவு காலத்துக்குத்தான் உறவாக இருக்க முடியும்? எப்போதாவது சிங்களவர்களோடு முரண்பாடுகள் ஏற்பட்டால் சிங்களவர்கள் தமிழர்களோடு சேர்ந்து கிழக்கை ஆண்டால் அப்போது நாம் என்ன செய்வது? எனவே நிரந்தரம் இல்லாத சிங்களவர்களோடு உறவைக் கொண்டு கிழக்கில் நாம் ஆட்சியமைப்பதை விட இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு நிரந்தர தீர்வாகும் என கருதினார்.

அதில் எவ்வளவு தீர்க்க தரிசனமாக சிந்தித்தார் என்பது அவர் மரணித்து 8 வருடங்களின் பின்னர் நாங்கள் உணர்ந்து கொண்டோம். 2006ஆம் ஆண்டளவில் வடக்கு கிழக்கு நீதி மன்றத்தினால் பிரிக்கப்பட்டது. கிழக்கிலிருந்து புலிகள் முற்றாக விரட்டப்பட்டு கிழக்கு மகாண சபை தேர்தல் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது.

அஷ்ரப் எதிர்பார்த்தார் கிழக்கு மகாண சபைத் தேர்தலில் இரண்டு அல்லது மூன்று தேர்தல் வரைக்கும் சிங்களவர்களோடு சேர்ந்து முஸ்லிம்கள் ஆட்சியமைக்கலாம். அதாவது மாகாண சபையின் மூன்று தவணைக்காலமாவாது சிங்களவர்களோடு உறவாக இருக்கலாம். பிறகு சிங்களவர்களோடு முரண்பாடு வந்து சிங்களவர்கள் தமிழர்களோடு சேர்ந்து ஆட்சியமைப்பார்கள். அப்போது நாம் என்ன செய்வது? என்ற கவலை அஷ்ரப்புகக்கிருந்தது.

ஆனால் நடந்தது என்னவென்றால் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தலிலேயே அதுவரை யுத்தம் செய்த சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தார்கள். அதுவரை காலமும் சிங்களவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்களை துளியும் கவனத்தில் எடுக்காமல் தமிழரை முதலமைச்சர் ஆக்குவதிலேயே சிங்கள அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிள்ளையானையும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவையும் தேர்தலில் களம் இறக்கிய சிங்கள அரசாங்கம் ஹிஸ்புல்லாஹ் அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெற்று இருந்த போதிலும் ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதில் எந்த முனைப்பையும் காட்டவில்லை.

ஹிஸ்புல்லாவை களம் இறக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸினாலும் ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

இலங்கையிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் ஜம்பர் போட்டு இருவரும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவது போன்று காட்டூன் படம் தயாரித்து தொலைக்காட்சியில் இடைக்கிடை ஒளிபரப்பினார்கள். கொழும்பில் முக்கிய சந்திகளில் இருவரினதும் ஜம்பர் போட்ட காட்டூன் படத்தை பெரிய கட்டவுட்டில் போட்டிருந்தார்கள். எவரை எவர் வெல்லுவாரோ என கேள்வி எழுப்பி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் பிள்ளையானையே சிங்கள அரசாங்கம் வெல்ல வைத்தது.

அஷ்ரப் எதிர்பார்த்தார் சிங்கள அரசாங்கம் முஸ்லிம்களோடு இணைந்து குறைந்தது இரண்டு மூன்று தவணைக்காவது கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களை ஆழ சந்தர்ப்பம் தரும் என எதிர்பார்த்தார். ஏனெனில் அவ்வளவு மோசமான ஒரு யுத்தத்தை செய்து விட்டு சிங்களவர்களும் தமிழர்களும் அவ்வளவு சீக்கிரம் ஒற்றுமைப்படுவார்கள் என அஷ்ரப் கருதியிருக்கவில்லை. இதனைக்காண அஷ்ரப் உயிரோடும் இருக்க வில்லை.

ஆனால் நடந்ததோ முதல் மாகாணசபை தேர்தலிலே தங்களோடு அவ்வளவு காலம் யுத்தம் செய்த தமழர்களைத்தான் அரசாங்கம் ஆட்சிக்கட்டிலில் ஏற்றியது. நேரடியாக தங்களோடு யுத்தம் செய்ய பிள்ளையானயே முதலமைச்சர் கதிரையில் உட்கார வைத்தது. அதுவரை தங்களோடு ஒட்டிருந்த முஸ்லிம்களை கைவிட்டது.

எனவே தான் வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து மற்றவர்களோடு சேர்ந்து ஆட்சியமைப்பதை விட இணைந்த வடகிழக்கிலே முஸ்லிம்களுக்கு தனியான மாகாணமே நிரந்தரமான தீர்வாகும் என அஷ்ரப் கூறினார். எவ்வளவு தீர்க்க தரிசனமாக மறைந்த மாமனிதர் அஷ்ரப் சிந்தித்து இருந்தார் என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு ஒரு தனிமாகாணம் அமைந்தால் வடக்கு கிழக்கு இணைவதைப்பற்றி முஸ்லிம்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஏனெனில் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களை எந்த தமிழர்களும் ஆழப்போவதில்லை. முஸ்லிம்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்வார்கள். அந்த முஸ்லிம் மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் இருப்பார். வடகிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு தமிழ் முதலமைச்சர் இருப்பார்.

வடக்கிலுள்ள நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு நிர்வாக அலகு உருவாக்கப்பட வேண்டும். அது பாண்டிச்சேனையை ஒத்ததாக இருக்கலாம். அல்லது உலகிலயே இது ஒரு புதிய பொறிமுறையாக இருக்கலாம். எங்களுடைய புதிய பொறிமுறையைப் பார்த்து எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினையில் உள்ள வேற நாடுகள் அதாவது நிலத்தொடர்பற்ற பிரதேசங்களை இணைப்பதற்கு தேவைப்பாடுள்ள அந்த நாடுகள் எங்களை முன்மாதிரியாக கொண்டு பின்பற்றலாம்.

இவ்வாறான முஸ்லிம் மாகாணம் உருவாகினால் அம்பாறை மாவட்டத்திலே உள்ள முஸ்லிம்களின் கை ஓங்கி தங்களது உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விடும் என்று மட்டக்களப்பிலே உள்ள முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் தாங்கள் குட்டி ஆழப்படுவோம் என மட்டக்களப்பு முஸ்லிம்கள் பயந்து இந்த முஸ்லிம் மாகாணத்திற்கு மட்டக்களப்பிலுள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பயப்படுவதற்கு இங்கு எதுவுமில்லை. உதாரணமாக தற்போது கிழக்குமாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் இருக்கின்றார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை குட்டி ஆழ்கின்றாரா? இல்லை. ஏனெனில் அவர் முதலமைச்சராக இருப்பதற்கு அம்பாறை மாவட்ட, மட்டக்களப்பு மாவட்ட, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவு தேவை. எனவே தனக்கு பதவியை தக்க வைக்க அவர் மூன்று மாவட்ட முஸ்லிம்களையும் சம கண் கொண்டு பார்க்க வேண்டும்.

மற்றுமொரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால் இன்று நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரி பால ஸ்ரீசேன இருக்கின்றார். இவர் சிங்களவர் என்பதற்காக முஸ்லிம்களை குட்டி ஆழ முடியாது. ஏனெனில் அவர் ஜனாதிபதியாக வந்தது முஸ்லிம்களின் வாக்குகளினால்.

எனவே முஸ்லிம் மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் அம்பாறை மாவட்டக்;காகரர் வந்தால் மட்டக்களப்பு முஸ்லிம்களை குட்டி ஆழ்வார் என்ற பயம் மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு தேவையில்லை. ஏனெனில் அந்த முஸ்லிம் முதலமைச்சராக இருப்பவருக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவு மட்டுமல்ல திருகோணமலை, மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவும் இருந்தால் தான் அவர் முதலமைச்சராக இருக்க முடியும். இந்த நிலமையானது அவரை சகல மாவட்ட முஸ்லிம்களையும் சம கண் கொண்டு பார்க்க வைக்கும்.

எனவே புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருந்து தங்களது உரிமைகளை வென்று விட வேண்டும். குறிப்பாக முஸ்லிம் இளைஞ்சர்களின் பங்கு இதில் அத்தியவசியமானதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பேஸ்புத்தகத்தில் ஒரு இஸ்டேடஸ் எழுதி விட்டு அதற்கு எத்தனை லைக் கிடைக்கின்றது என ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பரிசீலிப்பதை விட்டு விட்டு புதிய அரசியல் அமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

LEAVE A REPLY