அன்பென்றால் என்ன வென்று
அறிவதற்கு ஆசையா?
கூகிளில் தேடாமல்
குசினியில் தேடிப் பார்!
உம்மா மனைவி
உன் மகள் சகோதரி
நிஜமான அன்பை
நிதர்சனமாய்க் காணலாம்.

உண்மையான லைக்கும்
உயிரோட்ட செயாரும்
பெறுவதற்கு ஆசையா
பேஷ் புக்கின் நேரத்தை
பெற்றோர்க்குக் கொடுத்துப் பார்!
இதயத்தால் வழங்கும்
இதமான லைக் காண்பாய்.

உண்மையான நேசத்தை
உன் துணைக்கு நீ சொல்ல
பேஷ் புக்கின் ஸ்டேடஸில்
பிரியமே எனப் போடுவதிலும்
தலை வலியால் அவள் படுக்க
தடவிக் கொடுத்துப் பார்!
வசந்தம் செயாராகும்
வாழ்க்கையில் லைக் பெறுவாய்

தூரத்தில் இருப்பவர்கள்
துயரொன்றால் வாடி நிற்க
ஸ்கைப்பில் கோல் எடுத்து
ஏனோ தானோ பேசுவதிலும்
இறைவனிடம் கையேந்தி
இறைஞ்சிய பின்னாலே
அவர்களுடன் பேசிப் பார்
ஆத்மா upgrade ஆகும்.

கஷ்டப் படுபவனுக்கு
கை கொடுக்க விரும்பினால்
வட்ஸ் அப்பில் வார்த்தைகளை
வாரி வழங்குவதிலும்
நேரடியாய் அவன் குறையை
நிவர்த்திக்க முயன்று பார்
உன் உதவி இறையிடத்தில்
உண்மையில் forward ஆகும்.

போணில் கேம் அடித்தே
பொழுது போக்குவதிலும்
வானம் பூமி
வண்ண மலர்களினை
கொஞ்சம் ரசித்துப் பார்
குடும்பத்துடன் ருசித்து உண்
வாழ்க்கை எனும் பெரு கேமில்
வசந்த வெற்றி உன் கைக்கே.

-MOHAMED NIZOUS

LEAVE A REPLY