இலங்கை திரு நாடு அறுபத்தெட்டில் ஆனந்த சுதந்திரக் காற்றைச் சுவைக்கின்றது: அப்துல் அஸீஸ்

0
250

இலங்கை திரு நாடு அறுபத்தெட்டில் ஆனந்த சுதந்திரக் காற்றைச் சுவைக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் அறுபத்தெட்டாவது சுதந்திர தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது நாடு நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என பிரகடனப்படுத்தப்பட்ட பின் இன, மொழி, மத வேறுபாடுகளின்றி அரசியலிலும், வேலைவாய்ப்பிலும், பெண் விடுதலையிலும் சமத்துவ உரிமை எப்போது சீராக கிடைக்குமோ அப்போதுதான் அந் நாட்டு மக்கள் முழுச் சுதந்திரத்தை அனுபவித்தவர்களாக நோக்கப்படுகின்றனர்.

சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்ற இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளை மீட்டிப்பார்க்க வேண்டிய கட்டாயப்பாட்டிற்கு உள்ளாகின்றோம். இலங்கை பிரித்தானிய பேரரசிற்குக் கீழ்ப்பட்ட குடியேற்றம் ஒன்றாகவிருந்தது. எமது நாடு மட்டுமல்ல ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும் குடியேற்றவாதத்திற்குட்பட்டவையாகவே இருந்தது.

ஒரு நாடு தன்னுடைய நாட்டுக்கு மேலதிகமாக இன்னும் பல நாடுகளைத் தனது அதிகாரத்திற்குட்படுத்தி அவற்றை ஆட்சி புரியுமாயின் அது ஏகாதிபத்தியம் எனப்படும். இவ்வாறான ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்பட்ட நாடுகள் குடியேற்றங்கள் எனக் குறிப்பிடப்படும். பிரித்தானிய வெள்ளையர் ஆட்சியில் எமது நாட்டு மக்கள் வாழப் பழகிக் கொண்டனர்.

இருந்த போதிலும் அந்நியர்கள் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது அவர்களுக்கு அடிமைத் தனத்தினைக் கற்றுக் கொடுத்தனர்.

இதனை அப்போதைய எமது நாட்டுத் தலைவர்கள் விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மக்களின் இறைமை மற்றும் சுதந்திரம் பற்றி குரலெழுப்பினர்.

இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதென 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனாநாயகவுடன் மூன்று ஒப்பந்தங்களை பிரித்தானியா அரசு கைச்சாத்திட்டது.

1. பாதுகாப்பு ஒப்பந்தம்:

கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை கடற்படை முகாமிலும், கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் பிரித்தானிய படைகளை வைத்திருப்பதற்கு இலங்கை இணங்குதல்

2. வெளிவிவகார ஒப்பந்தம்:

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரமடைந்த நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது பிரித்தானியா விதித்திருக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதித்தல்

3. அரச ஊழியர் தொடர்பான ஒப்பந்தம்:

இலங்கையில் பணியாற்றும் ஆங்கிலேய அரச ஊழியர்கள் தொடர்ந்தும் பணியாற்றும்போது அவர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பவற்றை தங்கு தடையின்றி வழங்குவதற்கு
இலங்கை சம்மதித்தல்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானத்தின்படி சோல்பரியாப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரத்தை வழங்குவதற்காக இலங்கை சுதந்திர சட்டம் அமுலுக்கு வந்தது. இது 1947ம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமாகும்.

இதன் பிரதான வாசகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி முதல் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடு அல்ல என்பதுடன் இலங்கை தொடர்பாகப் பிரித்தானிய பாராளுமன்றம் பெற்றிருந்த ஆணையிடும் சட்டங்களாகப் பிறப்பிக்கும் அதிகாரம் இழக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் விரிவடைந்து காணப்பட்டது.

வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கவிருக்கும் போது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். இலங்கை நாட்டிற்கு சுதந்திரமானது அமைதியான முறையில் கிடைத்தது.

டி.எஸ் சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ. ஆர்டீ. பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, சேர்.பொன் இராமநாதன், சேர்.பொன். அருணாசலம், ரி.பி.ஜாயா, சேர். ராசிக் பரீட், அறிஞர் சித்திலெப்பை ஆகியோர் ஒன்றாக இணைந்து சமாதமானமான முறையில் இலங்கைக்கு பிhத்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்கள்.

அடிப்படைச் சுதந்திரம்

சுதந்திரத்தின் பிற்பாடு மனித உரிமைகள் பற்றிய கருத்துக்;கள் வளர்ந்து புதிய அர்த்தங்களைப் பெற்றிருந்தது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையின் அத்தியாயம் மூன்றில் பதினான்காவது உறுப்புரையே அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றி கூறுகிறது.

பேச்சுச் சுதந்திரமும், கருத்துவெளிப்படுத்தும் சுதந்திரமும் இதில் முக்கியமானதாகும். இலங்கை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இதனை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள்.

நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் சமூகச் சீர்கேடுகள் பற்றி எந்தக் கருத்தினையும் வெளியிட முடியும். இதனை கருத்தியல் ரீதியான விமர்சனமாக் கொண்டு நல்ல விடயங்களை எடுத்து நடப்பதன் மூலம் அடிப்படை உரிமையொன்றினை அனுபவிக்க முடியும்.

ஆகவே தற்போதைய சூழ்நிலையில் எமது இலங்கை நாடு முழுமையான ஆனந்த சுதந்திரக் காற்றைiயே சுவைக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY