மட்டக்களப்பில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு நடவடிக்கை

0
197

உலக ஈரலிப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஈர வலயம் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தாம் துவங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி மற்றும் பயிற்சி அதிகாரி ஏ. அரியசுதன் A. Ariyasythan – Capacity Building and Training Officer UNOPS தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிக்கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களும், பல்லின உயிரின வளர்ச்சி ஈர நிலங்களையும் துப்புரவு செய்து பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை 02.02.2016 முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பொலிஸாரும் இணைந்து மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் வாவிக்கரையோர சதுப்பு நில ஈரலிப்புக் கரையோரங்களைத் துப்புரவு செய்யும் பணியில் மட்டக்களப்பு மாநகர சபைத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி செயற்திட்டத்தின் விஷேட நிபுணர் வில்லியம் சிலந்திஸ் (WILLIAM YPSILANTIS Capacity Building Specialist UNOPS )இ ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி மற்றும் பயிற்சி அதிகாரி ஏ. அரியசுதன் திண்மக் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்ட அலுவலர் எம். சிவகுமார், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் சூழிலியல் பிரிவு பொறுப்பதிகாரி பி.பி.ஐ. அபேசிங்ஹ உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஈர நிலங்கள் பில்லியன் வாழ்வாதாரங்களுக்கு அதிகமாக நமக்கு வாழ்வளிக்கின்றன.

ஈர நிலங்களில் சாக்கடைகளைக் கொட்டுதலுக்கு எதிராகக் குரலெழுப்புவோம். அதனை அழுக்குகளால் நிரப்பாது பாதுகாப்போம்.

சதுப்பு நிலங்களை மாசுபடுத்துவது மீன்பிடி, விவசாயம், காலநிலை, குடி நீர், உணவுகள், தாவரங்கள், நிலம், வளி என்பனவற்றுடன் உயிர்ப் பல்லினத் தன்மையையும் பாதிக்கின்றது என்ற விவரங்கள் அடங்கிய கையேடுகளும் வாகனங்களில் பயணித்தோருக்கும் பாதசாரிகளுக்கும் மீனவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY