ஏறாவூர் நகர மத்தியஸ்த சபை மூலம் 230 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டன

0
95

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மத்தியஸ்த சபை மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு கையாளப்பட்ட 397 பிரச்சினைகளில் 230 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக ஏறாவூர் நகர மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ரீ. இஸ்மாயில் தெரிவித்தார்.

மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு பொலிஸ் நிலையங்கள், பொதுமக்கள், மற்றும் நீதிமன்றங்கள் மூலம் ஏறாவூர் நகர மத்தியஸ்த சபையிடம் சமர்ப்பிக்கப்பட்ட 397 பிரச்சினைகளில் 230 முரண்பாடுகளுக்கு சமரசம் காணப்பட்டுள்ளது.

மேலும் 167 பிரச்சினைகள் இணக்கம் எட்டப்படாமல் நிலுவையில் உள்ளன.

பொதுமக்களிடமிருந்தும், பொலிஸ் நிலையத்திலிருந்தும், நீதிமன்றங்களிலிருந்தும் எமது மத்தியஸ்த சபைக்கு இணக்கம் காண்பதற்காக பிரச்சினைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

தகராறுகள் ஏற்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு மன உளைச்சல், நேர விரயம், பணச் செலவுகள், பயண நெருக்கடிகள், உற்பத்திப் பின்னடைவு என்பவை ஏற்படுகின்றன.

ஆயினும், இந்த இழப்புக்கள் தமது மத்தியஸ்த சபை மூலம் முடிந்தளவு குறைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தர்கள் குழாமில் 06 பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கடமையாற்றுகின்றனர்.

ஆயினும், பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது மத்தியஸ்த சபையில் இன்னும் அதிகமாக இருப்பது பெண்களின் விவகாரங்களை பெண்களே கையாள்வதற்கு இலகுவாக அமைவதோடு அவர்கள் சங்கடமின்றி தமது தரப்பு வாதங்களை முன் வைப்பதற்கும் ஏதுவான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

கிராமங்களில் சீட்டுக் காசு மோசடி, ஒரு சில வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் பெற்று அதனைச் செலுத்தாமை, குடும்பப் பிணக்குகள், சிறு குற்றச் செயல்கள் இது போன்ற பல தரப்பட்ட பிரச்சினைகள் மத்தியஸ்த சபையிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

ஆயினும், ஏறாவூர் நகர பிரதேசத்தில் இயங்கும் ஒரு வங்கி தங்களுக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி கடன் தந்து விட்டு இப்பொழுது அதிக வட்டி அறவிடுவதான முறைப்பாடுகளே தம்மிடம் அதிகம் வந்து சேர்வதாகவும் மத்தியஸ்த சபைத் தலைவர் தெரிவித்தார்.

பொது மக்கள் ஆசைப்பட்டு வங்கியிலிருந்து கடன் பெற முன்னர் அதன் வட்டி வீதங்கள் மற்றும் நிபந்தனைகளை நன்கு அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது வீண் சிரமங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY