மது அடிமைகளுக்குப் புனர்வாழ்வளிக்க “ஆரோக்கியப் பாதை” வைத்தியசாலை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

0
174

மதுப்பாவனைக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுப்போய் உடல் உள ஆரோக்கியத்தை இழந்திருக்கும் மதுப் பிரியர்களுக்கு “ஆரோக்கியப் பாதை” எனும் பெயரில் புனர்வாழ்வு நிலையமொன்று சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி லக்ஷ்மி சி. சோமதுங்க அவர்களால் ஏறாவூர்ப் பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஏற்கெனவே 2005 ஆம் ஆண்டு முதல் மாவடிவேம்பில் இயங்கி வரும் மட்டக்களப்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் ஒரு பிரிவாக இது இயங்கும் என்று மட்டக்களப்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் ஒரேயொரு அரச புனர்வாழ்வு மையமான இந்த மருத்துவமனையில் மதுப் பாவனைக்கு அடிமையாகி உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் தங்கியிருந்து சிகிச்சை பெறக் கூடியதாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான இரத்த பரிசோதனைகள், இலவச மருத்துவ ஆலோசனைகள், நஞ்சகற்றல் செயற்பாடுகள், தனிநபர் உளவள ஆலோசனைகள், நடத்தை மாற்ற சிகிச்சைகள், குடும்ப ஆதரவு மற்றும் குடும்பங்களை மீள் இணைத்தலுக்கான வழிவகைகள், சமூகத் திறன் பயிற்சிகள், நெருக்கீட்டு முகாமைத்துவம், சாந்த வழிப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உள சிகிச்சைகள் இந்த நிலையத்தில் வழங்கப்படுவதாக வைத்தியர் பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
தற்சமயம் இந்த வைத்தியசாலையில் 12 ஆண்களும் 08 பெண்களுமாக மொத்தம் 20 பேர் தங்கியிருந்து உடல் மற்றும் உளநல சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா, சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி லக்ஷ்மி சி. சோமதுங்க சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா, சுகாதார சேவைகள் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் கே. முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.எப். அப்துல் றஹ்மான் மட்டக்களப்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார உள்ளிட்டோரும் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

0bbac775-eba8-4c5f-8fde-9aedf0625860 2d655ab9-b3b3-4be5-9c9e-df2ebefd46ff 9a1c9ce2-4296-4b43-b4c9-1cede5a1169a 9b1f8339-6d5f-4f9f-904b-8e33de610d0c c88408e0-c392-4d02-aa0d-7dfa2664d800

LEAVE A REPLY