மாடறுப்பு தடை இலங்கையின் பொருளாதாரம் இயற்கை சமநிலை சார்ந்த ஒரு தேசிய பிரச்சினை – இம்ரான் மஹரூப்

0
180

நேற்று மாலை கிண்ணியா மஹரூப் நகரில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பாரளமன்ற உறுப்பினர், அண்மைக்காலமாக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ஜனாதிபதியின் மாடறுப்பு சம்மந்தமாக கருத்து தெரிவித்தார்.

மாடறுப்பு தடை இலங்கையின் பொருளாதாரம் இயற்கை சமநிலை சார்ந்த ஒரு தேசிய பிரச்சினை என கூறினார் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாரளமன்ற உறுப்பினர், அண்மையில் இலங்கையில் இறைச்சிக்காக மாடறுப்பது தடைசெய்யப்பட்டு தேவையான இறைச்சிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கூறியிருப்பதாக தை பொங்கல் விழாவில் ஜனாதிபதி கூறியிருந்ததும் ஜனாதிபதியுடனான பொதுபலசேனாவின் சந்திப்பும் தற்போது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நல்லாட்சியை சந்தேக கண் கொண்டு பார்க்க தூண்டியுள்ளது.

மாடறுப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அது இலங்கையின் பொருளாதாரம், இயற்கை சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது இலங்கை பால் உற்பத்தி பொருட்களின் இறக்குமதிக்கு வருடாந்தம் சுமார் 440 கோடி ரூபாய் வெளிநாட்டு செலாவணியை இழக்கிறது. இதனை ஈடு செய்யவே அரசு இலங்கையில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கின்றது.

பாலுக்காக வளர்க்கப்படும் இக்கால்நடைகள் குறுப்பிட்ட காலம் முடிவடைந்ததும் பால் உற்பத்தியை நிறுத்திவிடும் . பால் உற்பத்தியை நிறுத்திய இக்கால்நடைகளை தொடர்ந்து பராமரிக்க எந்த விவசாயியும் விரும்பமாட்டான். இந்த முதிர்ந்த கால்நடைகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன.

மாடறுப்பு தடை செய்யப்பட்டால் கால்நடை உற்பத்தியை நம்பியுள்ள 1.2 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதனால் நேரடியாக பாதிக்கப்படபோவது இலங்கையின் கிராமிய பொருளாதாரமே. இதனால் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் இது அரசாங்கத்துக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும்
உள்நாட்டில் வளங்களை வைத்துக்கொண்டு அதே வளங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது ஏராளமான வெளிநாட்டு செலாவணியை இழக்க நேரிடும். இந்த முதிர்ந்த மாடுகளை யார் பொறுபேற்பது என்ற பிரச்சனையும் ஏற்படும். இம்முதிர்ந்த மாடுகளால் இயற்கை சமநிலை குழம்பி இறுதியில் அது உயிர் பல்வகைமை இழப்புக்கு இட்டுச்செல்லும்.

புல்லை உண்டு வளரும் மாடுகளை மனிதன் உண்கிறான் இதுவே இயற்கையான உணவுச்சங்கிலி. மாடுகள் அறுப்பது தடைசெய்யப்பட்டால் மாடுகளின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிக்கும். இதனால் உணவுக்கான புற்களின் தேவை அதிகரிக்க அவை வயல் நிலங்களை நாசம் செய்யும். ஒருகட்டத்தில் இயற்கையில் உள்ள புற்கள் அழிவடைய மாடுகளுக்கிடையில் இனவகப்போட்டி ஏற்பட்டு இறுதியில் மாடுகள் பட்டினியால் இறக்கும்.

ஆகவே இந்த மாடறுப்பு தடை என்பது முஸ்லிம் சமூகத்தின் பிரட்சினையல்ல அது ஒரு தேசிய பிரச்சினை இலங்கையின் பொருளாதாரம் இயற்கை சமநிலை சார்ந்த பிரச்சினை என்பதை ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசின் முக்கிய அமைச்சர்களுக்கு தெளிவூட்டவேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி,பிரதமரிடம் நேரடியாக முறையிடுவேன் என்று தெரிவித்தார்.

அஹ்மத் இர்ஷாத்

LEAVE A REPLY