இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து அமைச்சரிடம் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டு!

0
237

இரண்டு இலட்சம் ரூபா பணப் பையைக் கண்டெடுத்து அதனை உரியவரிடம் சேர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் இடம் ஒப்படைத்த மாணவனுக்கு திங்கட்கிழமை அந்த மாணவன் கல்வி பயிலும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பெரும் பாராட்டும் நன்றி தெரிவிப்பும், பரிசளிப்பும் இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தினையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்தில் அனாதரவாக கிடந்த பொதியொன்றினை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எஸ்.எச். இஹ்ஸான் என்ற மாணவன் கண்டெடுத்துள்ளார். அதனைப் பிரித்து பார்த்தபோது அப்பொதியினுள் பெரும் தொகை பணம் இருப்பதனை கண்டு எவரிடமும் கூறாமல் நேரடியாக மைதானத்தின் மேடையில் அமர்ந்திருந்த பிரதியமைச்சர் ஹரிஸ் இடம் ஒப்படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இம்மாணவனின் நல்ல செயலை மேடையில் வைத்தே பாராட்டிய பிரதியமைச்சர் கல்முனை பொலிஸாரின் உதவியுடன் அப் பணத்தினை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்த மாணவனின் இறைவனுக்கு பயந்த செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர். திங்களன்று பாடசாலைக் காலைக்கூட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்களும் இம்மாணவனை பாராட்டி வாழ்த்தி பரிசு வழங்கி கௌரவித்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY