யோசிதவுக்கு எந்தவிதமான சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை – துசார உபுல்தெனிய

0
198

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவுக்கு, மேலதிக பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான மேலதிக சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்சவும் அவருடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் சாதாரண சிறைக்கூண்டுகளுக்குள் தான் அடைக்கப்பட்டுள்ளனர். கவிசன் திசநாயக்க மட்டும், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவையற்றவர்கள் சிறைச்சாலைப் பகுதிக்கு வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறைக்கைதியை நாளொன்றுக்கு ஒருமுறை அதிகபட்சம் மூன்று விருந்தினர்கள் சந்திக்க முடியும். மேலதிக விருந்தினர்கள் பார்வையிட விரும்பினால் சிறைச்சாலை அத்தியட்சகருடன் ஆலோசிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், காலை 8 மணி தொடக்கம், மாலை 5 மணி வரை சிறைக்கைதிகளைப் பார்வையிடலாம்.

சந்தேகநபர்கள் தமக்குத் தேவையான மூன்று வேளை உணவையும் வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள முடியும். எனினும், அத்தகைய கோரிக்கை எதுவும் யொசித ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் இருந்து விடுக்கப்படவில்லை. சிறைச்சாலை உணவுகளே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யோசித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு சிறைச்சாலையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வேறு கைதிகள், செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, நேற்று முன்தினம் இவர்கள் சிறைக்கூண்டில் தூக்கமின்றித் தவித்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

-ET-

LEAVE A REPLY