கல்வியின் நோக்கத்தினை புரிந்து கொள்ளாத வரை நமது பிரச்சினைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது :அப்துர் ரஹ்மான்

0
943

“அறிவியற்துறை மிக வேகமாக வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு முறையான ஆய்வு மிகமிக அவசியமாகின்றது.

கல்வி என்பது மிக விரிந்த பார்வையுடனும், சமகால உலக நியமங்களுக்கு ஏற்பவும் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். கல்வியின் நோக்கத்தினையும், அதன் பரப்பினையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை நமது சமூகம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தொவித்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் கல்விப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கான அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று (31.01.2016) ‘அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றது. அதன் தலைவர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் தலைமையில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் நடைபெற்ற இவ்வங்குரார்ப்பண நிகழ்வில் ‘தனியார் உயர் கல்வியின் தாக்கங்களும், பங்களிப்பும்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்குவதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCAS Campus நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

அறிவியற்துறை மிக வேகமாக வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு முறையான ஆய்வு மிகமிக அவசியமாகின்றது.

கல்வி என்பது மிக விரிந்த பார்வையுடனும், சமகால உலக நியமங்களுக்கு ஏற்பவும் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு பற்றி பேசப்படுகின்ற பல தருணங்களில் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை ஒப்பீடு செய்வதிலும், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு எத்தனை பேர் தெரிவாகின்றனர் என்ற ஒப்பீடுகளுடனும் பலரது பார்வைகளும் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. இது மிகவும் துரதிஸ்டவசமானது. கல்வியின் நோக்கத்தினையும், அதன் பரப்பினையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை நமது சமூகம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

பல்கலைக் கழக அனுமதியினை நமது சமூகத்தில் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதற்கு சமமாகவே ஏனைய பல விடயங்களிலும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். முறையான ஆரம்பக் கல்வி, பாடசாலை இடைவிலகல், ஆங்கில மற்றும் கணனி விஞ்ஞானத்துறையிலான ஊக்குவிப்பு, பல்கலைக் கழக வாய்ப்புக் கிடைக்காதோருக்கான மாற்றுவழிகள், தொழில் கற்கைகள், கல்வியின் மூலமாக கிடைக்கும் ஒழுக்க பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆழுமை விருத்தி அத்தோடு துறை சார் பிரயோக அறிவு என ஏனைய பல்வேறு விடயங்களிலும் நமது கவனம் குவிக்கப்படவேண்டும்.

அந்த வகையில், முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்ற இந்த ஆய்வு பத்து தலைப்புக்களில் ஒரு விரிவான பரப்பைக் கொண்டிருக்கிறது என்பது திருப்தியளிக்கிறது.

இன்றைய புதிய உலக ஒழுங்கில் ஏனைய துறைகளில் இருப்பது போலவே உயர் கல்வித்துறையிலும் தனியார் துறையினரின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. நம்நாட்டில் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறும் 150000 க்கும் அதிகமான மாணவர்களில் 25000 பேர்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தினால் பல்கலைக் கழக வாய்ப்பினை வழங்கக் கூடிய இருக்கிறது .இந்நிலையில் ஏராளமான ஏனைய மாணவர்களுக்கான வாயப்புக்களை வழங்கக்கூடிய வழிமுறையாக தனியார் உயர் கல்வித்துறை இன்று இலங்கையில் மாறியிருக்கிறது. அரசாங்கம்கூட இதனை ஒரு தேசிய பங்களிப்பாகவே கருதி இதனை மேலும் மேம்படுத்துவதனை தனது கொள்கையாக வகுத்துக் கொண்டிருக்கிறது.

தனியார் உயர்கல்வித்துறையானது ஏராளமான வாய்ப்புக்களைக் தருவது போலவே பல்வேறு புதிய புதிய சவால்களையும், பிரச்சினைகளையும் அது ஏற்படுத்தியிருக்கிறது. இந்நாட்டில் தனியார் உயர் கல்வி நிறுவனமொன்றை ஸ்தாபித்து தொடர்ந்தும் தலைமை தாங்கி வழி நடாத்துகின்றவன் என்ற அடிப்படையில் இத்துறையில் எனக்கு 16 வருட அனுபவமிருக்கிறது.

இதனடிப்படையில், தனியார் உயர் கல்வியினை நெறிப்படுத்தித் தரப்படுத்துகின்ற ஒரு முறையான கட்டமைப்பு இந்நாட்டில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகும். எனது வெளிநாட்டு அனுபவத்தோடு இவ்விடயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்நாடுகளின் தனியார் உயர் கல்வித்துறை மிக நுணுக்கமாக நெறிப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம் தரமான கல்விச் சேவையினை தமது மாணவர்களுக்கு அவர்கள் உத்தரவாதப்படுத்துகின்றனர். இந்த நிலைமை இன்னும் இங்கு உருவாகவில்லை. உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான பல சந்திப்புக்களின் போது நான் இதனை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.

அதேபோல் முஸ்லிம் சமூகம் தனியார் உயர் கல்வித்துறையை பயன்படுத்திக் கொள்வதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் ஒன்று நமது மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் போதாமை. மற்றையது பொருளாதாரச் சிக்கல்கள். இந்த இரண்டுக்குமான தீர்வுகளை ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கின் ஊடாக வழங்க முடியுமெனின் தனியார் உயர் கல்வித்துறையின் உச்சகட்டப் பலன்களை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நாட்டின் சிறுபான்மை மக்களாக நாம் வாழுகின்ற போதிலும் கூட நாம் பல்வேறு துறைகளிலும் கனிசமான பங்களிப்பினை நாட்டுக்கு வழங்கி வருகிறோம். ஆனால், முறையான புள்ளி விபரங்களுடன் இவை முன்வைக்கப்படுவதில்லை. அந்த வகையில் எனது தலைமையில் இயங்கும் உயர் கல்வி நிறுவனமானது முழு நாட்டிலும் ஏனையோர்களால் செய்யமுடியாத பல பங்களிப்புக்களை உயர் கல்வித்துறையிலும், தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதிலும் செய்திருக்கிறது. இந்நாட்டின் குடிமகனாகவும், அதே வேளை ஒரு முஸ்லிம் பிரஜையாகவும் இருந்து செய்யப்பட்ட இந்தப் பங்களிப்பானது முஸ்லிம் சமூகத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தேசிய பங்களிப்புக்களில் ஒன்று எனத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் முஹம்மட் நாஜிம், கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி உவைஸ் ஹனீபா, உயர் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் அஸ்ஸெய்க் முஹம்மது நவவி,ஜெஸீமா இஸ்மாயில், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதிகளான முஹம்மட் றமீஸ், கலாநிதி முஹம்மட் நுபைல்,முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் NM அமீன் உள்ளிட்ட 50க்கும் அதிகமான முஸ்லிம் கல்வி மான்களும், புத்தி ஜீவிகளும், துறைசார் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY