தமிழ் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கென தனது அமைச்சில் பிரத்தியேக பிரிவொன்றை ஆரம்பிக்க உள்ளோம்: ஹாபிஸ் நசீர்

0
292

கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு துறையில் ஆர்வம் காட்டி வரும் தமிழ் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கென தனது அமைச்சில் பிரத்தியேக பிரிவொன்றை ஆரம்பிக்க உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று காலை தெரிவித்தார் .

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் மதுரையை தளமாக கொண்டு இயங்கும் தமிழக வர்த்தக சங்க முதலீட்டாளர்களுடனான சந்திப்பின் போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை மேற்கொண்டார் .

இந்த சந்திப்பில் தமிழக வர்த்தக சங்க சிரேஷ்ட தலைவர் எஸ் . ரத்னவேலு, தமிழக வர்த்தக சங்க தலைவர் என் . ஜெகதீஸ்வரன் மற்றும் இலங்கை தமிழக முதலீட்டு துறை இணைப்பாளர் மணவை அசோகன் ஆகியோர் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு கலதாரி ஹோட்டலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச முதலீட்டு அரங்கம் நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்த முதலீட்டாளர்களை இன்று காலை பிரத்தியேகமாக சந்தித்து முதலீடு தொடர்பான பல்வேறு விளக்கங்களை முதலமைச்சர் ஹாபிஸ் வழங்கினார் . அவர் கூறியதாவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணம் எண்ணற்ற வளங்களை தன்னகத்தே கொண்டது . தமிழக முதலீட்டாளர்கள் இந்த மாகாணத்தில் முதலீடு செய்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை கிழக்கு மாகாண சபை வழங்கும்.

முதலீட்டாளர்கள் எந்தெந்த துறையில் ஆர்வம் கொண்டுள்ளனரோ அவர்களுக்கு தேவையான தகவல்களையும் தளங்களையும் மாகாண சபை வழங்கும் என உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் எமக்கும் பயன் கிட்டுவதோடு இந்திய – இலங்கை பொருளாதார உறவும் பலப்படக் கூடிய நிலை உருவாகும், அது மட்டுமன்றி இலங்கை முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்குரிய ஆர்வத்தையும் இந்த முயற்சி தூண்டும்.

தமிழக முதலீட்டாளர்கள் இந்த துறையில் காட்டும் ஆர்வத்தை பொறுத்து எதிர்வரும் பெப்பிரவரி மாதமளவில் கிழக்கு மாகாணத்தில் கர்நாடகம், கேரளம், தமிழகம், ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து பாரிய முதலீட்டு அரங்கமொன்றை நடாத்த நாம் உத்தேசித்துள்ளோம்.

முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள், தடைகளை நீக்கி தருவோம் அத்துடன் அரச மட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மத்திய அரசுடன் பேச்சு நடாத்தி அவற்றை நிவர்த்திப்போம் என நாம் உறுதியளிக்கின்றோம். நீங்கள் நம்பிக்கையுடன் முதலிடலாம். அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம் என்றும் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இரத்தின வேலு கூறியதாவது,
துடிப்பான, நம்பிக்கையான அரசியல் தலைமைத்துவம் ஒன்றை கிழக்கு மாகாணம் பெற்றிருக்கின்றது. எனவே தான் இந்த மாகாணத்தில் நாம் முதலிடுவதற்கு நம்பிக்கையுடன் முன்வந்துள்ளோம். சர்வதேச முதலீட்டு அரங்கு சிறப்பான தகவல்களை எமக்கு வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் உரை எமக்கு வலுவான நம்பிக்கையை வழங்கியிருக்கின்றது. மீன்பிடி, பால் உற்பத்தி, விவசாயம், மற்றும் இன்னோரன்ன துறைகளில் நாம் முதலிட தீர்மானித்துள்ளோம், எமது முதலீட்டாளர்கள் உங்கள் நாட்டில் முதலிடுவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்கள். என்பதை நாம் மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY