பட்டதாரிகளுக்கு 10,000 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகாணத்திற்கு வெளியில் அனுப்பினால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும்: ஷிப்லி பாறூக்

0
259

பட்டதாரிகளுக்கு 10,000.00 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகாணத்திற்கு வெளியில் அனுப்பினால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

2016ம் ஆண்டிற்கான முதலாவது கிழக்குமாகாண சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (26.01.2016) அன்று திருகோணமலை பேரவைச் செயலகத்தில் சபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் குறைந்த ஊதியத்துடன் வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விஷேட பிரேரணை ஒன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகினால் முன்வைக்கப்பட்டது.

இவ் அமவர்வில் உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பட்டதாரிகளுக்கான பயிற்சி நியமனத்தைப் பெற்றிருக்கின்ற அநேகமான பட்டதாரிகள் ரூபா 10,000.00 ஊதியத்துடன் மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது இப்பட்டதாரிகளை பாரிய அசௌகரியங்களுக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் என்ற வகையில் அவர்களை உடனடியாக மாகாணத்துக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்சபையில் முன்மொழிந்தார்.

இலங்கையில் பல தசாப்தங்களாக எமது மாணவச் செல்வங்கள் இலவசமாக கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் வரையும் இலவசக் கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் பன்னிரெண்டு ஆண்டுகள் பாடசாலைகளிலும் அதனைத் தொடர்ந்து 3,4,5 வருடங்கள் அவர்களுடைய பட்டப்படிப்புகளை பல்கலைக்கழகங்களிலும் முடித்துவிட்டு, மேலும் இரண்டு மூன்று வருடங்கள் தாமதத்தின் பின்பு அவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுகின்றபோது பத்தாயிரம் ரூபாவினைக் கொடுத்து மாகாணத்துக்கு வெளியில் அதுவும் தூரப்பிரதேசங்களுக்கு அவர்களை அனுப்புகின்ற இந்தச்செயலானது எதிர்வரும் காலங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்வது ஒரு கேள்விக்குறியானதொரு விடயமாக மாறும் என்பது என்னால் உறுதியாகச்சொல்ல முடியும். ஏனென்றால் தற்போது வளர்ந்து வருகின்ற இளம் சமூகம் வேகமாக பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு பல கற்பனைகளுக்கு மத்தியில் தங்களுடைய கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் பிள்ளைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தாங்கள் பொருளாதாரத்தினை ஈட்டி வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான தூர இடங்களுக்குப் பட்டதாரிகளை அதுவும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தினைக் கொடுத்து அவர்களை பயிலுனர்களாக ஒரு வருடத்துக்கு அமர்த்துவதென்பது நிச்சயமாக அவர்கள் மீது ஒரு பாரிய சுமையைச்சுமத்துகின்ற ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கொழும்பு, கண்டி என்று பல்வேறு இடங்களில் மாகாணத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வளர்ந்து கொண்டிருக்கும் இந்த கல்விச் சமூகத்தில் அதிகமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர், பல்கலைக் கழகங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உயர் கல்வி கற்கின்றனர்.

பெண்களை தூர இடங்களுக்கு நியமித்து அனுப்புகின்ற பொழுது அவர்களால் தொடர்ச்சியாக வேலைசெய்ய முடியாது போகின்றது. எங்களுக்கு பல அனுபவங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுவருகின்றவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் 2 அல்லது 3 வருடங்களில் திருமணம்செய்து ஓரிரு வருடங்களில் கர்ப்பிணியாகின்றார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு போக்குவரத்து செய்யமுடியாது போன்ற காரணங்களை முன்வைத்து தற்காலிக இடமாற்றம் செய்து அவர்களின் பிரதேசங்களில் கடமை புரிகின்றனர்.

இலங்கை சட்டத்தின் பிரகாரம், அவர்களது மகப்பேற்றுக்கு பின்னர் 81 வேலை நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கின்றது. சிசுவொன்றினை பெற்றெடுத்தபின்பு மீண்டும் ஏறத்தாள 9 மாதங்கள் விடுமுறை முடித்து மீண்டும் கடமைக்கு வருவதற்கு அவர்களுடைய சிசு தடையாக அமைகின்றது.

இவ்வாறு பட்டதாரிகளாக உருவாகின்ற பெண்களுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுக்கு சமமாக ஆண்களும் உருவாக வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. இந்த தேவைப்பாட்டை தடுத்து நிறுத்துவதற்குரிய முக்கிய காரணி ஒரு பிள்ளை சாதாரண தரம் கற்கின்றபொழுது தனியார் கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடாத்துகின்ற போர்வையில் சாதாரண தரம் கற்றபின்பு 2, 21/2 வருடங்கள் உயர்கல்வி கற்கவேண்டும் அதன்பின் கிட்டத்தட்ட 1வருடம் காத்திருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகி 3 அல்லது 5 வருடங்கள் பல்கலைகழகங்களில் கழிக்கவேண்டும் ஆகமொத்தத்தில் 6,7 வருடங்கள் செலவு செய்து பட்டப்படிப்பின் பின் ஒரு தொழிலை பெறுவதாக இருந்தால் மீண்டும் 2,3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை தவறாக வழிகாட்டுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் சாதகமாக அமைவதுடன் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட முற்படுவார்கள்.

அதிகமான பிள்ளைகள் சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தர கல்வியினை தொடராமல் விட்டுவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் 06 மாத குறுகிய காலப்பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் என்ன? அவர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர் 8,9 வருடங்கள் முடிந்த பிற்பாடு ரூபா 10,000.00; சம்பளத்திற்கு வேலை செய்வதா அல்லது 06 மாத குறுகிய கால பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு ரூபா 100,000.00 சம்பளம் பெறக்கூடிய அந்த வேலைவாய்ப்பினை பெறுவதா என்ற வினாவிற்கு விடைகானும் முகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் உழைத்து வாழ வேண்டிய தேவைப்பாடும் கட்டாயமும் இம் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு குடும்பத்தில் 2,3 பெண்பிள்ளைகள் இருப்பின் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளை மீது பாரிய சுமைகள் சுமத்தப்படுகின்றன ஏனெனில் தனது பெண்சகோதரிகளுக்குரிய கடமைகளை மேற்கொள்ளவேண்டும் வீடுகட்ட வேண்டும் என்ற கடமைகள் வரும்போது அவன் தனது கல்வியினை இடைநடுவே நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக தனது கல்வியினை தியாகம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்படும் அந்த நிலைமையும், கல்வியிலே ஆண்பிள்ளைகள் இல்லாமல் போகின்றதோர் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை முழுவதும் உள்ள ஆண்பிள்ளைகள் தமது கல்வியினை இடைநடுவே நிறுத்தி விட்டு வெளிநாடுகளிலும், இங்குள்ள சிறிய சிறிய கூலிவேலைகள் அல்லது அவர்களுடைய கல்வி தகைமைக்குப்பதிலாக அவர்கள் பொருளாதாரத்தினை ஈட்டுகின்ற வேறுசெயற்பாடுகளில் ஈடுபடுவதனூடாக எதிர்காலத்தில் கல்வியை இழந்த சமூகமாக இலங்கை மாறக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது, ஆகவே இந்த செயற்பாடானது நிச்சயமாக வடக்கிலே வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர் வேலைவாய்ப்புக்களும் வடமாகாணத்திற்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கின்றது ஏன் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இவ்வாறானதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தினை உங்களிடம் கேட்கின்றேன்.

ஆகவே உடனடியாக முதலமைச்சரும், இங்குள்ள அமைச்சரவை வாரியமும் இதற்குரிய தீர்வொன்றை கண்டறிந்து, அவர்களின் கஷ்ட நிலைமையை கருத்திற்கொண்டு அவர்கள் பெப்ரவரி மாதம் 13ம் திகதிக்குமுன் பொறுப்புக்களை பாரமெடுக்குமுன் அவர்களை உடனடியாக மாகாணத்திற்குள் உள்வாங்கி அந்தந்த மாவட்டங்களில் நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.

LEAVE A REPLY