துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி பத்து குழந்தைகள் உள்பட 25 பேர் பலி

0
161

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக அவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.

இப்படி வருபவர்களில் பலர் நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தும் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் இதைப்போல் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகளாக வர முயன்ற சுமார் 3600 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த சிலர் கிரேக்க நாட்டில் உள்ள லெஸ்வோஸ் தீவின் வழியாக துருக்கி நாட்டு கடல் எல்லைக்குள் பயணித்த அகதிகள் படகு அய்வாகிக் என்ற நகரின் அருகே இன்று கடலில் மூழ்கியது. இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற துருக்கி கடலோர காவல்படையினர் பத்து குழந்தைகள் உள்பட 25 பிரேதங்களை மீட்டுள்ளனர்.

15 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரில் மூழ்கிய மேலும் சிலரை கடலோர காவல் படையினர் தேடிவருவதாகவும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

LEAVE A REPLY