மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச எல்லைப் பிரச்சிணைகள் தீர்க்கப்பட வேண்டும் :சுபையிர்

0
213

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நல்லாட்சியைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு பிரதேச எல்லைப் பிரச்சிணைகள் தீர்க்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்

கிழக்கு மாகாண சபை அமர்வு (26.01.2016 செவ்வாய்கிழமை) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜயசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள கிராம மக்களின் அடிப்படை பிரச்சிணைகள் தொடர்பான தனிநபர் பிரேரணையின் போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கமானது இந்த நாட்டிலே வாழுகின்ற மூவின மக்களாலும் ஏற்படுத்தப்பட்டதொன்றாகும். இதன்பிற்பாடு இந்நாட்டில் நல்லினக்கத்துடன் சகவாழ்வும் தோற்றம் பெற்றுள்ளது. குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் சகல அரசியல் கட்சிகளும் மனம் திறந்து தங்களுடைய பிரச்சிணைகளை பேசக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபை உறுப்பினர் ஜயசேன கொண்டுவந்த பிரேரணை சம்மந்தமான சிங்கள கிராமங்களின் மக்களுடைய விவசாய நிலங்கள் தொடர்பாக பல தடவைகள் இந்த சபையிலே பேசப்பட்டுள்ளது. இதனைக் கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பு இந்த மாகாண சபைக்கு உள்ளது ஆகவே இந்த மக்களுடைய பிரச்சிணைகளும் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டிலே நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுடைய பங்களிப்புக்களைச் செய்தார்கள் அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நல்லாட்சியைப் பயன்படுத்தி பல சாதனைகளை ஈட்டியிருக்கின்றார்கள் விசேடமாக சம்பூர் கிராமம் மீட்கப்பட்டிருக்கிறது. அதுபோன்று இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுடைய காணிகள் மீட்கப்பட்டிருக்கிறது.

ஆனால் முஸ்லிம் தலைமைகளினால் எதனையும் சாதிக்கமுடியாமல் போயுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற சிங்கள மக்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

இன்று இந்த ஆட்சியிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்காளிகளாக இருக்கின்ற சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச எல்லைகள் அதேபோன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் போன்ற பிரதேச எல்லைகள் ஏறாவூர்ப்பற்றில் முஸ்லிம்களுடைய காணிப்பிரச்சிணைகள் போன்ற நீண்டகால பிணக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசும் பொறுப்புணர்வுடன் இணைந்து மனம் திறந்து பேசவேண்டும்.

இரு அரசியல் கட்சிகளும் இதய சுத்தியுடன் செயற்பட்டு இந்த நல்லாட்சியில் அப்பிரச்சிணைகளுக்கு நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் இல்லையேல் இதனைப்போன்ற இன்னுமொரு நல்லாட்சிக்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்.

விசேடமாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவர்களாக தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதிகள் இணைந்து செயற்படுகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இவ்வாறான பிரச்சிணைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் அவ்வாறு அரசியல் தலைவர்களால் தீர்க்கமுடியாவிட்டால் மூன்று சமூகத்தினையும் சேர்ந்த சிவில் சமூகத் தலைவர்களைக் கொண்டு இந்தப்பிரச்சிணைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

றியாஸ் ஆதம்

LEAVE A REPLY