நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

0
197

கிழக்கு மாகாணத்தில் திருமலை, மட்டு நகர், அம்பாறை மாவட்ட கஷ்டப் பிரதேசங்களில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விசேட ஏற்பாடுகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மத்திய அரசாங்க கல்வி அமைச்சுடன் இணைந்து அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பிரதேச மட்டத்தில் க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களை நியமிக்க கோரும் அவசரப் பிரேரனை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் திருமதி. ஆரியவதி கலப்பதியினால் சமர்ப்பிக்கப்பட்ட போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் மூதூர், குச்சவெளி, ஈச்சியம் பற்றை , மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கஷ்டப் பிரதேசங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசம், இறக்காமம் பிரதேசம் உட்பட பல பிரதேசங்களில் நீண்ட காலமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றன. இப்பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்த்து வைப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் உங்களிடம் உள்ளது, மத்திய அரசாங்கத்தின் அதிகாரமும் உங்களிடம்தான் உள்ளது ஆகையால் இந்த நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறான நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள விடயங்களை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக சமர்ப்பிக்கப்படும் நல்ல விடயங்களுக்காக நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டின் நிதியில் பொத்துவில் கல்வி கோட்டத்திற்கு 31 மில்லியன் ரூபாவும், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்கு 91 மில்லியன் ரூபாவும், அக்கரைப்பற்று கல்வி கோட்டத்திற்கு 3 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், அக்கரைப்பற்று கல்வி வலயக் கல்வி பணிப்பாளர் இந்த தவறை விட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் இந்த சபையில் குறிப்பிட்டார். கல்வி அமைச்சின் நிதியை கையாளும் அதிகாரம் கல்வி அமைச்சிக்கு இருந்த போதிலும், வலயக் கல்விப் பணிப்பாளர் நிதியினை தவறாக ஒதுக்கீடு செய்துள்ளார் என குற்றம் சுமத்துகின்றீர்கள். இது நியாயமில்லை.

இந்த நிதி ஒதுக்கீட்டு தீர்மானத்தை யார் மேற்கொண்டது என்பது பற்றி கல்வி அமைச்சர் கவனிக்க வேண்டும். பொத்துவில், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டங்களில் கல்வித் தேவைகள் அதிகமாகவுள்ளது என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக பெருந்தொகை மக்கள் வாழும் அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்திற்கு 03 மில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்குவதற்கு தீர்மானம் எடுத்ததனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, கல்வி அமைச்சருக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தெரியாமல் இவ்வாரான சமன்பாடு இல்லாத நிதி ஒதுக்கீடுகளினால் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளும், பிரதேச வாதங்களும் உருவாகின்றது. எனவே, இது தொடர்பாக கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கல்வித் துறைக்கு அர்ப்பணிப்புடன் பணி புரியும் உயர் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி நடை பெறுகின்றது என பேச்சளவில் பேசிக் கொண்டு மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் அர்ப்பணிப்புடன் பணி புரிந்த வலயக் கல்விப் பணிப்பாளர் அகமட்லெவ்வை அரசியல் காரணங்களுக்காக அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு பிரதிப் கல்விப் பணிப்பாளராக பதவி குறைக்கப்பட்டு இடமாற்றப்பட்டார். மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக அர்ப்பணிப்புடன் பணி புரிந்தவரை பிரதிக் கல்விப் பணிப்பாளராக தரம் குறைத்து இடமாற்றியது நியாயமில்லை.

இதே போல் அக்கரைப்பற்று வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய கியாஸ் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்போது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 04வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றுவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலும், பொத்துவில் உப கல்வி வலயத்திலும் நிலவுகின்ற மிக முக்கியமானப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு மாகாண கல்வி அமைச்சரை இப்பிரதேசங்களுக்கு வருகை தந்து மாகாண சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடுவதன் ஊடாக இரண்டு கல்வி வலயங்களிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கல்வி அமைச்சரிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தும் அதற்கான திகதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இப்பிரதேசங்களில் தொடர்ந்து இவ்வாரான பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.

எனவே, விரைவாக கல்வி அமைச்சர் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும், பொத்துவில் உப கல்வி வலயத்திற்கும் விஜயம் செய்து இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணங்களை அடையாளங்கண்டு இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

கிழக்கு மாகாணத்தைச் சேரந்த பட்டதாரிகளுக்கான பயிற்சி நியமனத்தை பெற்றுள்ள பட்டதாரிகளுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பணவுடன் வேறு மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ள இப்பட்டதாரிகளை உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற அவசர பிரேரனையை மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால் இன்று இச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட பட்டதாரிகள் நமது கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றப்பட வேண்டும் என்ற பிரேரனைக்கு ஏகமானதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவினை வழங்குவதாக குறிப்பிட்டார்.

றியாஸ் ஆதம்

LEAVE A REPLY