தனிநபர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளை தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கைச்சாத்திட முன்வந்திருக்கிறது

0
213

தனிநபர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளை தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் (ஒட்டாவா சாசனம்) இலங்கை அரசு கைச்சாத்திட முன்வந்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தேசிய கண்ணிவெடி அகழ்வு நிலையம், ஜெனிவா சர்வதேச ஒன்றியம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்திற்கான வளங்களை ஒருங்கினைக்கும் பயிற்சிப் பட்டறை நிகழ்வு நேற்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
2002 இருந்து இதுவரை 86 சதுரகிலோ மீற்றர் வரையான நிலங்களில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை அகற்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 64 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட நிலங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடியகற்றல், மற்றும் மீள்குடியேற்றம் என்பன ஒரு சவாலாக இருந்தாலும் குடியேற்றப்பட்ட மக்களின் ஜீவனோபாய வழிகளுக்கு கண்ணிவெடிகள் பெரும்தடையாக இருக்கிறது. இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அரசாங்கம் எடுத்துக் கொண்டு போகும் நல்லிணக்க செயற்பாட்டுடன் இது தொடர்புபட்டுள்ளது.

தேசிய கண்ணிவெடி அகழ்வு நிலையம், இலங்கையில் கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பான மூலோபாய திட்டமிடல் ஒன்றினை வரைந்துள்ளது. 2016 தொடக்கம் 2020 கால எல்லைக்குள் இலங்கை ஒரு கண்ணிவெடி மற்றும் வெடிபொருளின் ஆபத்து அற்ற நாடாக மாற்றுவதே அதன் இலக்காகும். இதன் மூலம் ஒட்டாவா சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடுவது அதன் இலக்கை அடைந்து கொள்ளும் பாதையில் ஒரு மைல்கல்லாகும்.

ஒட்டாவா சாசனத்தில் இனைவதன் மூலம் இலங்கை தெற்காசிய பிராந்தியத்தின் உலகலாவிய உடன்படிக்கையுடன் சேருகின்றது. கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த சர்வதேச சமூகங்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளல் மிக முக்கியமானதாகும்.

இலங்கை ஒட்டாவா சாசனத்தில் ஒரு பிரதிநிதியாக இருப்பதன் மூலம் வளங்களை ஒருங்கினைத்து நாட்டைக் கட்டியெழுப்ப உறுதுணையாக இருக்கும் என்பதோடு அனைத்து சர்வதேச முகவர்களையும் பங்காளிகளாக ஒருங்கிணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு தான் அழைப்பதாக இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அமெரிக்கா, பிரித்தானியா, கனடா,சுவிஸ்லாந்து, ஜப்பான், பிரதிநிதிகளும் ஹலோரெஸ்ட், மெக், டாஸ், சார்ப் ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்களுடன் அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி மற்றும் மேலதிகச் செயலாளர் எம்.எம்.நயீமுதின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.தாஹிர்

LEAVE A REPLY