ஒன்றிணைந்த தீர்மானமே நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம்!

0
166

தனித்தீர்மானமன்றி ஒன்றிணைந்த தீர்மானமே நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமாகிறது. அரசியலமைப்புத் திருத்தத்திலும் இதற்கிணங்கவே செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிஸி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
அச்செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முதல் வருடத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்த அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். புதிய வருடத்தில் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கிணங்க புதிய தேர்தல் முறையைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம்.

புதிதாக அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதா அல்லது நடைமுறையிலுள்ளதில் திருத்தம் கொண்டு வருவதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிப்பர். அது தொடர்பில் கல்விமான்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் கருத்தைப் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் விருப்பப்படியன்றி நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்கவே செயற்படுவோம். மக்கள் கருத்துகளைப் பெற மூன்று மாத கால அவகாசமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தால் மட்டுமே எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வெற்றிபெற முடியும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவது வெறும் மாயை அது, கட்சியின் ஒரு சிலரது கருத்தே தவிர பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்று ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் அடி மட்டத்திலுள்ளவர்களையும் ஒன்றிணைத்துக் கொள்ள முடிந்துள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளித்த ஜனாதிபதி; கடந்த 2015 ஜனவரி 8ம் திகதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு தோல்வி கண்டது. அதிலிருந்து மீள கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் பார்த்தாலும் ஐ. தே. க வுக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அக்கட்சியாகவே மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளோம்.

இதனை எதிர்காலத்திலும் முன்னெடுப்போம். அரசியல் கட்சியொன்று தோல்வியுற்றால் அதனை 24 மணித்தியாலத்தில் மீளக் கட்டியெழுப்பிவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று கட்சி தோல்வியைத் தழுவுவதற்கான காரணத்தை அறிவதும் முக்கியமாகும். இதுவும் யுத்தத்தைப் போன்று தான்.

நீங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்று ஒருவருட காலம் நிறைவடைந்துள்ள போதும் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறவில்லையென கூறப்படுகிறதே? ஒரு வருடத்தில் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெற முடியாது தான். மக்கள் என்னிடம் நாட்டை ஒப்படைத்தபோது நாடு பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டை முன்னேற்ற ஆதாரமாயிருந்த வெளி நாட்டுத் தொடர்புகளில் பெரும் சிக்கல்கள் இருந்தன. அத்தோடு ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள் எமது நாட்டின் மீது நம்பிக்கை இழந்திருந்தன.

நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் இந்த நிலையை சரிசெய்ய வேண்டிய அவசியம் எமக்கிருந்தது.

இதனால் மக்கள் கண்களால் காணக்கூடிய முன்னேற்றம் இடம்பெறாவிட்டாலும் சர்வதேசம் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடனான தொடர்பை நாம் வெற்றிகரமாக மீளக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. அத்தோடு நாட்டு மக்களின் சுதந்திரமும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தத்தை நிறைவேற்ற முடிந்தது போன்றே சர்வதேசத்தின் நம்பிக்கையையும் வெற்றிகொள்ள முடிந்துள்ளது.

எமது நாடு வறுமை நிறைந்த நாடு. பொருளாதார சிக்கல்கள் இங்குள்ளன. வெளிநாட்டு ஒத்துழைப்பு எமக்கு மிக மிக அவசியமானது.

அதேபோன்று எம்மை எதிராகப் பார்ப்பவர்கள் தவறான கண்கொண்டே நோக்குவார்கள். குறைகூறுபவர்களும் அக்கூட்டத்திலுள்ளவர்ளே என்றும் அவர் பதிலளித்தார்.

-Thinakaran-

LEAVE A REPLY