இஸ்ரேல் நாட்டின் நலன் பாதுகாப்பு பிரிவினை இலங்கையில் அமைப்பதற்கான செயற்பாடுகள் இந்நாட்டில்; வாழும் முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது

0
218

பலஸ்தீன மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டு அநீதியான முறையில் தீங்கிழைத்துவரும் இஸ்ரேல் நாட்டின் நலன் பாதுகாப்பு பிரிவினை இலங்கையில் அமைப்பதற்கான செயற்பாடுகள் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு (26) நேற்று தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனால் கொண்டுவரப்பட்ட இஸ்ரேல் நலன்புரி நிலையம் ஸ்தாபிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர் பிரேரணை மீது உரையாற்றிய பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் நலன் பாதுகாப்பு பிரிவு இலங்கையில் அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இஸ்ரேல் நலன்புரி நிலையம் அமைப்பதற்கு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளைகக் கண்டிக்கும் நோக்கத்துடன் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் உணர்வுரீதியான எதிர்ப்புக்களை ஆர்ப்பாட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தினர். அப்போது நிந்தவூரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் சுடப்பட்டார் பல இளைஞர்கள் பொலிசாரினால் கைதுசெய்யப்படடனர்.

ஆவ்வாறான சந்தர்ப்பத்தில் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அன்று அரசியல் அதிகாரம் எதுவுமில்லாத சூழ்நிலையில் எங்களைக் காப்பாற்றினார். விசேடமாக நமது நாட்டில் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் தங்களின் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் இந்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கும் பெரும் பங்களிப்பினையும் வழங்கியுள்ளனர். இந்தநாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஒருவருடம் கடந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் நிறைவுசெய்யப்படாத ஒரு சூழ்நிலையே இப்போது காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் இலங்கையில் அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்றமை குறித்து நாம் எல்லோரும் கவலைப்படவேண்டியுள்ளது. இலங்கையில் இனவாதத்தை தூண்டுவதற்கு தடைவிதிக்கும் பிரேரணனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவிட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளதனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதசெயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

எனவே, இலங்கையில் இஸ்ரேல் நாட்டு நலன்புரி நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைளுக் எதிராக கிழக்கு மாகாண சபையில் ஏகமனதான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் நமது நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருப்பதாக முஸ்லிம் மக்கள் பேசிக்கொள்வதனை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக குரல்கொடுக்க முடியாத இன்றைய சூழ்நிலையில் தேர்தல் காலங்களில் வீராப்பு பேசிய முஸ்லிம் தலைவர்கள் மௌனமாகவிருப்பதாக முஸ்லிம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே கிழக்கு மாகாண சபை ஏகமனதாக இலங்கை நாட்டின் இஸ்ரேல் நலன்பிரிவு அமைப்பதற்கான எதிர்ப்பினை காட்ட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

றியாஸ் ஆதம்

LEAVE A REPLY