அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

0
274

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 4–1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் இந்தியா– அவுஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் அடிலெய்டில் இன்று நடக்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 31 ஓட்டங்களில் (4 பவுண்டரி, 1 சிக்சர்) வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவான் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த ரெய்னா, கோஹ்லி சிறப்பாக விளையாடினர்.

கோஹ்லி 32 பந்தில் தனது 10வது அரைசதத்தை அடித்தார். இவருக்கு உறுதுணையாக விளையாடிய ரெய்னா 34 பந்தில் 41 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 134 ஓட்டங்கள் குவித்தது.

கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி தான் சந்தித்த முதல் பந்தை சிக்சராக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த பந்திலும் பவுண்டரி பறக்க விட்ட டோனி 3 பந்தில் 11 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் குவித்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய கோஹ்லி 55 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சர் என 90 ஓட்டங்கள் குவித்தார். இவருடன் டோனி (11) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில், வாட்சன் 2 விக்கெட்டுகளும், பால்க்னர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்:-

இதன் பின்னர் 189 ஓட்டங்கள் எடுத்தால் வென்ற என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அணித்தலைவர் பின்ஞ், வார்னர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

அதிரடியாக விளையாடிய வார்னர் 9 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஸ்மித், பின்ஞ் சிறப்பாக விளையாடி வந்தனர்.

இந்நிலையில் ஸ்மித் 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்ஞ் 44 ஓட்டங்களில் நடையை கட்டினார்.

இதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் அவுஸ்திரேலிய விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது.

டிரவிஸ் ஹெட் (2), கிறிஸ் லயன் (17), வாட்சன் (12), மாத்தீவ் வாடே (5), பால்க்னர் (10), ரிச்சர்ட்சன் (9), கெமெரேன் போய்ஸ் (3)வரிசையாக வெளியேறினர்.

இதனால் அவுஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தனால் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில், பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, பாண்டியா தலா 2 விக்கெட்டையும், நெஹ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY