மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விசேட இருநாள் பயிற்சி நெறி!

0
228

மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விசேட இருநாள் பயிற்சி நெறியொன்று நடாத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இம் மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளில் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விசேட இருநாள் பயிற்சிநெறியொன்று நடாத்தப்படவுள்ளமை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக காத்தான்குடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொலைபேசியூடாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனம் ஊடாக சவூதி அரேபிய கலச்சார அமைச்சுடன் தொடர்பு கொண்டு சில உடன்பாடுகளை எட்டி இருக்கின்றோம். அந்த அடிப்படையிலே முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் ஒத்துழைப்புடன் தற்போது தொடர்ச்சியாக இலங்கையில் உலமாக்கள், முஅத்தின்கள், இமாம்கள், பள்ளிவாயல்களில் கடமை புரிகின்றவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.

கடந்த இரண்டு தடவைகள் பயிற்சி வழங்கியிருப்பதன் அடிப்படையிலே இம்முறையும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உலமாக்கள், இமாம்கள், பள்ளிவாயல்களில் கடமைபுரிகின்றவர்கள், குத்பாப் பிரசங்கங்கள் நடத்துவோர் போன்றோருக்கு விசேட பயிற்சி முகாமொன்றை நடாத்துவதற்கு தீர்hனித்துள்ளோம். இதில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த முக்கிய ஆசிரியர்கள், முஸ்லிம் கலச்சார அமைச்சினுடைய கல்விமான்கள் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள். ஆகவே நாம் இதனூடாக எமது உலமாக்களுக்கு மிகச் சிறப்பான தலைமைத்துவப் பயிற்சியினை வழங்கவிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இந்த உலமாக்களுக்கான ஆளுமை விருத்தி பயிற்சி நெறி சம்பந்தமாகக் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி கருத்து வெளியிடுகையில்,

எமது ஹிறா பவுண்டேஷனுடை தலைவராகவும் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் தலைவராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து அங்கிருக்கின்ற முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு விஜயம் செய்து அதற்குப் பொறுப்பான அமைச்சரோடு நடாத்திய சந்திப்பின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் வருடா வருடம் எமது இலங்கையிலே இருக்கின்ற உலமாக்கள், பள்ளிவாயல்களில் கடமையாற்றுகின்ற இமாம்கள், ஜும்ஆப் பள்ளிவாயல்களிலே குத்பாப் பிரசங்கம் நடத்துகின்ற கதீப்மார்கள் அதேபோன்று தஃவாக் களத்திலே இருக்கின்ற தாயிக்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்ற காழிகள் – இவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒரு கருத்தரங்கொன்றை நடாத்த வேண்டும் என்ற அடிப்படையிலேதான் இந்த கருத்தரங்கு தற்போது இரண்டாவது வருடமாக எமது பல்கலைக்கழகக் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு உலமாக்களுக்கான கருத்தரங்கு சென்ற வருடமும் ஜனவரி மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்முறை அது 30ஆம் 31ஆம் திகதிகளில் நடாத்தப்படுகின்றது.

இந்த கருத்தரங்கு இதுவரை காலமும் சவூதி அரசாங்கத்தினுடைய முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கொழும்புக்கு வெளியே அதிகமான முஸ்லிம்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்திலே அதன் பிரயோசனங்கள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயும், அதே போன்று எமது பிரதேசத்திலே இருக்கின்ற அனேகமான உலமாக்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற துறைகளிலே அதிக பயிற்சியினை வழங்குவதற்காகவும், அதாவது உலமாக்கள் என்றால் அவர்களது கடமைகள் என்ன பொறுப்புக்கள் என்ன அவற்றை எவ்வறு நிறைவேற்ற வேண்டும், அதே போன்று பள்ளிவாயல் இமாம்களின் கடமைகள் என்ன பொறுப்புக்கள் என்ன அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், பள்ளிவாயல்களில் குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துகின்ற இமாம்கள் எவ்வாறு நடக்க வேண்டும், தஃவாக் களத்தில் இருக்கின்றவர்கள் தமது தஃவாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பன போன்ற விடயங்களை முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் அதற்கென பயிற்றுவிக்கப்பட்ட சில பொறுப்பான கலாநிதிகளைக் கொண்டுவந்து ஒவ்வாரு நாடுகளிலும் நடத்தப்பட்டுவரும் இந்த கருத்தரங்கினை எமது கௌரவ அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஹிறா பவுண்டேஷனுடைய முக்கிய அங்கமாக இருக்கின்ற எமது பல்கலைக்கழகக் கல்லூரியின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இங்கு நடாத்தவுள்ளார்கள்.

இதற்காக சவூதி அரசாங்கத்தின் கிழக்காசியாவில் இருக்கின்ற மார்க்க விடயங்களைக் கையாளுகின்ற அஷ்ஷெய்க் அகமட் அலி அல்-றூமி அவர்களது தலைமையிலே இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கலாநிதி அஷ்ஷெய்க் இப்றாஹிம் மொஹமட் அல்-ஹுகைல் அவர்களும் அஷ்ஷெய்க் காலித் எஸ்ஸா உஸைரி அவர்களும் வருகைதரவுள்ளார்கள் இவர்கள் இருவரும் சர்வதேச நாடுகளிலே தஃவாக் களத்திலே இருக்கின்ற தாயிக்ளுக்கு மேற்பார்வையாளர்களாக இருகக்கூடிய சகோதரர்கள். இவர்களுள் அஷ்ஷெய்க் காலித் எஸ்ஸா உஸைரி அவர்கள் சென்ற முறை எமது கருத்தரங்கில் கலந்துகொண்டவராவார்.

இவர்கள் தவிர இந்தியாவிலிருந்தும் பேராசிரியர் நந்தனகோபால் தமோது அவர்களும் வருகை தரவிருக்கின்றார்கள். அவர் தற்போது சவூதியில் இருக்கின்ற முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இதில் கலந்துகொள்கின்ற உலமாக்கள், மதரசாங்களின் முஅல்லிம்கள், பள்ளிவாயல் இமாம்கள், கதீப்மார்கள், தாயிக்களுக்கு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவர்களது துறைசார்ந்த ரீதியில் கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது.

இதில் மொத்தமாக 7 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. முதல் நாள் 4 அமர்வுகளும், இரண்டாவது நாள் 3 அமர்வுகளும் இடம்பெறவுள்ளன. முதலாவது நாள் ஆரம்ப நிகழ்வுடன் சேர்த்து முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. அந்த அமர்வு லுஹர் வரை நடைபெறும். இரண்டாவது, மூன்றாவது அமர்வுகள் சாப்பாட்டுக்குப் பின்னரும் நடைபெறவுள்ளன. இரண்டவது நாளும் லுஹர் தொழுகையோடு இரண்டு அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் இறுதி நிகழ்வாக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் ஊர்ப் பிரமுகர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கருத்தரங்கில் பங்குபற்றும் உலமாக்களுக்கு ஒரு பயணப் பை, முஸ்லிம் கலாச்சார அமைச்சினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ், பிரயாணக் கொடுப்பனவு என்பன வழங்கப்படவுள்ளதோடு இரண்டு நாட்களுக்குமான உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டள்ளன.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகத் தெரிவு செய்யப்படுபவர்கள் தமது வருகையின்போது கண்டிப்பாக அவர்களுக்கான அழைப்பிதழை தங்களுடன் எடுத்து வர வேண்டும். இதற்கு மேலதிகமாக அவர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றும் வழங்கப்படவுள்ளது எனவும் இயக்கம் வளர்ப்பது, கொள்கை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு செயலமர்வுகள் நடாத்தப்படுவதில்லை, கொள்கைத் திணிப்புகள் எவையும் இங்கு இடம்பெறாது இறுதியாக வினாவிடை நிகழ்வு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலமாக்கள், இமாம்கள், பள்ளிவாயல்களில் இருக்கின்ற கதீப்மார்கள், தாயிக்கள் எந்தச் சாராராக இருந்தலும் இவர்களால்தான் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. களத்தில் இருக்கின்ற தாயிக்களைப் பொறுத்தவரை அவர்கள் தஃவாச் செய்யும் முறை தொடர்பில் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் தாம் சொல்வது மட்டுமே சரி என்றும் தாங்கள் செய்யும் தஃவா முறைதான் சரியென்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பலரது மனம் புண்பட்ட நிலையில் ஒதுங்கிக்கொண்டார்கள், சிலர் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள், சிலர் அடங்கி இருக்கின்றனர். இதிலுள்ள சாரியான முறைகளை புரிந்து கொண்டால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது எனவும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

இந்த ஊடகவியாலளர் சந்திப்பில் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் பணிப்பாளர் மொஹமட் அமீர், நிதி நிருவாகப் பொறுப்பாளர் மொஹமட் அதீக் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம்.சாமில் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.அப்துல் நஸார்

LEAVE A REPLY