பிக்குகள் சிலரால் நீதிமன்றத்தின் முன் குழப்பநிலை

0
274

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்தமையை அடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரரை விளக்கமறியலில் வைப்பின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி, பிக்குகள் சிலர் ஒன்று கூடியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுபலய, ராவன பலய மற்றும் சிகல ராவய ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிறைச்சாலை பஸ்சை செல்ல விடாமல் பாதையை மறித்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு மேலதிகமாக கலகத் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதோடு, தண்ணீர் பவுச்சர்களும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் சிறைச்சாலை பஸ்சை செல்லவிடாமல் தடுத்து, துறவிகள் கூச்சலிட்டபடி, ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறும் அவ்வாறு இல்லையாயின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறும் கோரிக்கை விடுப்பதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY